தில்லி அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் மகிழ்ச்சி வகுப்புகள் மாணவர்களின் மன ஒருமைப்பாட்டை அதிகரிக்கின்றன என்று ஒடிஸா மாநிலத்தின் கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸ் தெரிவித்தார்.
தில்லியில் அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் மகிழ்ச்சி வகுப்புகளை ஒடிஸா கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன், திரீ இடியட்ஸ் படத்தை எடுக்க காரணகர்தாவான லடாக்கைச் சேர்ந்த கல்வியாளர் சோனம் வாங்சுங் ஆகியோர் திங்கள்கிழமை பார்வையிட்டனர். அப்போது, தில்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியாவும் உடனிருந்தார்.
இவர்கள் தில்லி மேற்கு வினோத் நகர் உள்பட பல்வேறு அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் மகிழ்ச்சி வகுப்புகளைப் பார்வையிட்டனர். பிறகு சமீர் ரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில் "தில்லி அரசுப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை திங்கள்கிழமை கவனித்தேன்.
இதற்கு மகிழ்ச்சி வகுப்புகளே பிரதான காரணமாகும். இந்த வகுப்புகளை அறிமுகப்படுத்திய தில்லி அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சி வகுப்புகள் மாணவர்களின் மன ஒருமைப்பாட்டை அதிகரித்துள்ளன' என்றார்.
கல்வியாளர் சோனம் வாங்சுங் கூறுகையில் "இந்தியாவின் எதிர்காலம் அரசுப் பள்ளிகளிலேயே தங்கியுள்ளது. பணம் படைத்தவர்கள் தனியார் பள்ளிகளிலும், ஏழைகள் அரசுப் பள்ளிகளிலும் கற்க வேண்டும் என்பதை மாற்ற வேண்டும். இதற்கு அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றுவதே தீர்வு ஆகும். தில்லி அரசு அதை மேற்கொண்டு வருகிறது' என்றார்.
சோனம் வாங்சுங்கின் வாழ்க்கை ஹிந்தியில் "த்ரீ இடியட்ஸ்' என்ற பெயரில் படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.