தில்லி ரோஹிணி பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 50 வயது பள்ளி ஆசிரியர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இதுகுறித்து ரோஹிணி காவல் துணை ஆணையர் எஸ்.டி. மிஸ்ரா திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லி கஞ்சன்வாலா பகுதியில் பள்ளி ஆசிரியர் மஹாவீர் நான்கு பேருடன் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. துப்பாக்கியால் சுடப்பட்டதில் மஹாவீர் சிங்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளது. கஞ்சன்வாலா பகுதி அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் மஹாவீர் சிங்கிற்கு எதிரிகள் யாரும் இல்லை. வேறு ஒருவரை தாக்குவதற்காக வந்த போது, தவறுதலாக சிங் மீது துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.