புதுதில்லி

இரு வேறு விபத்துகளில் கன்வாரியா இருவர் சாவு

29th Jul 2019 07:24 AM

ADVERTISEMENT

தில்லியில் இரு வேறு சம்பவங்களில் கன்வாரியா என்று அழைக்கப்படும் சிவபக்தர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் சாலை விபத்திலும், மற்றொருவர் மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்துள்ளனர்.
கன்வாரியாக்கள் ஆண்டு தோறும் பருவமழைக் காலத்தில் கங்கை நீருடன் ஹரித்துவாரில் இருந்து புறப்பட்டு தங்களது சொந்த ஊருக்குச் சென்று சிவராத்திரி அன்று வீட்டில் உள்ள சிவனுக்கு பூஜை செய்வர். இதுபோன்று சென்ற சிவபக்தர்கள் இருவர் வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்த இரண்டு சம்பவங்களும் சனிக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்துள்ளது. அதில் ஒருவர் தில்லி கன்டோன்மண்ட் பகுதியைச் சேர்ந்த மோஹித் (24) என்றும், மற்றொருவர் செளரவ் விஹார் பகுதியைச் சேர்ந்த விஜேந்தர் கராணா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் டிரக்குகளில் யாத்திரை மேற்கொண்ட போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் மோஹித் மற்றும் மூவர் சென்ற டிரக், சரக்குகளை ஏற்றிச் சென்ற மற்றொரு டிரக் மீது மோதியதில் காயமடைந்தனர். மேற்கு தில்லி, சகர்பூர் பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. சனிக்கிழமை அதிகாலை 2.41 மணியளவில் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சிவபக்தர்கள் சென்ற அந்த டிரக், மழை காரணமாக சகர்பூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.
பின்னர், அவர்கள் டிரக் மீது தார்ப்பாய் மூடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குருகிராமிலிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு அந்த வழியாக வந்த மற்றொரு டிரக், சிவபக்தர்கள் இருந்த டிரக்கின் மீது மோதியது. இதில் காயமடைந்த மோஹித் உள்ளிட்ட நால்வரும் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், சிகிச்சையின் போது மோஹித் உயிரிழந்தார். காயமடைந்த விஜய் தாக்குர் (40) டிரக்கை ஓட்டி வந்துள்ளார். அவர் ஜனக்புரியைச் சேர்ந்தவர். மற்றவர்கள் சர்பூரைச் சேர்ந்த அங்கித் (27), அபிஷேக் (27) என்று அடையாளம் காணப்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் சரக்கு ஏற்றிய டிரக்கின் ஓட்டுநர் அஜய் சங்கர் (41) கைது செய்யப்பட்டுளளார். 
மற்றொரு சம்பவம்: இரண்டாவது சம்பவத்தில் விஜேந்தர் கராணா என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவருடன் சென்ற மூவர் காயமடைந்தனர். அவர்கள் சென்ற டிரக்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான ஒலிபெருக்கி கருவி, உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியதைத் தொடர்ந்து மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சுஷில் சௌத்ரி (24), ராஜன் (22, ஜிதேந்தர் (27) ஆகிய மூவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து சனிக்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் போலீஸுக்கு தகவல் கிடைத்தது. கராணா மற்றும் 25 பேர் டிரக்கில் செல்லும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் ஹரித்வாருக்கு டிரக்கில் சென்று கொண்டிருந்த போது ஜெய்த்பூரில் சென்ட்ரல் பேங்க் ஏடிஎம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கராணா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஓட்டுநராக இருந்து வந்த கராணாவுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT