விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிப்புத் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 16,17, 18 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறும் என தில்லியில் உள்ள சட்டவிரோதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு இந்தியா முழுவதும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
அதன் பிறகு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தமிழகம், தில்லி உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த தீர்ப்பாயம், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சரியே என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 2014, மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை, 2019, மே 13 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு (2024, மே மாதம் வரை) நீட்டித்து, அரசிதழில் அறிவிக்கையாக மத்திய அரசு கடந்த மே 14-ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு ஆட்சேபம் இருந்தால், ஜூலை 26-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் விசாரணையின்போது ஆஜராகி கருத்துத் தெரிவிக்கலாம் என்று கடந்த ஜூன் 11-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகளுக்கான தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான சங்கீதா தீங்க்ரா ஷேகல் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சார்பில் அஜய் திக்பால் ஆஜராகி, மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் தொடர்பாக பிரமாணப் பத்திரங்கள் குறித்தும், உளவுத்துறை அறிக்கை குறித்தும் தெரிவித்தார். தடை குறித்து 59 நாளேடுகளில் வெளியான விளம்பரங்கள் குறித்தும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நீட்டிக்கப்பட்ட தடை தொடர்பாக தமிழகத்தில் வெளியாகும் அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் அளிக்கப்பட்டதையும் தெரிவித்தார்.
அப்போது, தீர்ப்பாயத்துக்கு வந்திருந்த மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, "விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக "பொடா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். அதே குற்றச்சாட்டின் பெயரில் என் மீது 124ஏ பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறேன்.
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒரே நபர் நான்தான். விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து நடைபெற்று வருகின்ற தீர்ப்பாய விசாரணைகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வருகிறேன். எனவே, இத்தீர்ப்பாயத்தில் என்னுடைய வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டுகிறேன்' என்றார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி சங்கீதா தீங்க்ரா ஷேகல் வைகோ எழுப்பியுள்ள ஆட்சேபம் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டதுடன், மத்திய அரசும், தமிழக அரசும் தாக்கல் செய்துள்ள விளம்பரம் தொடர்பான அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்புடைய விசாரணை ஆகஸ்ட் 16,17,18 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று தெரிவித்தார்.