புதுதில்லி

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஸ்வாதி மாலிவால் எதிர்ப்பு

27th Jul 2019 08:20 AM

ADVERTISEMENT

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 
திருநங்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரால் திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மசோதாவில் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளதாகக் கூறி, அந்த மசோதாவுக்கு தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: 
திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் பல முக்கியமான தவறுகள் உள்ளதுடன், திருநங்கைகள் பாதுகாப்புத் தொடர்பான முக்கியமான அம்சங்களும் இம்மசோதாவில் இடம்பெறவில்லை. 
திருநங்கைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க இந்த மசோதாவில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுவாக பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க இந்திய சட்டத்தில் இடம் உண்டு. இந்த சட்ட மசோதா சட்டமாக்கப்பட்டால் அது திருநங்கைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களை அதிகரிக்கவே செய்யும். இந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். திருநங்கைகளுடன் ஆலோசித்ததில்  அவர்களும் இம் மசோதாவில் பல தவறுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இதை வலியுறுத்தி மக்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என்றார் அவர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT