புதுதில்லி

தமிழக உள்துறை செயலர், டிஜிபிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

27th Jul 2019 07:38 AM

ADVERTISEMENT

காவலர்கள் பணியமர்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைவர் (டிஜிபி) ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட 168 காவலர்கள் தாக்கல் செய்த மனுவில், "2011-ஆம் ஆண்டு நாங்கள் காவலர்களாகப் பணியில் சேர்ந்தோம். எங்களை கடந்த 2013-ஆம் ஆண்டு ஆயுதப்படைக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் காரணமாக, நாங்கள் 2013-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களாகவே கருதப்படுவோம். 
இதனால் எங்களின் இரண்டு ஆண்டு கால பணிமூப்பு, பணப்பலன்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படும்' என கோரியிருந்தனர்.
இந்த வழக்கை 2018-ஆம் ஆண்டு விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் உள்ளிட்ட 168 காவலர்களையும் 2011-ஆம் ஆண்டில் இருந்து பணி வரன்முறை செய்து அவர்களுக்கான பணப்பலன்களை 6 வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, 168 பேர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. 
இந்த வழக்கை அண்மையில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலர், காவல்துறை தலைவர் (டிஜிபி) ஆகியோர் ஜூலை 17-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. 
இதனிடையே, இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜூலை 10-ஆம் தேதி மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
அப்போது, தமிழக அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆஜராகி, "காவலர்கள் பணியமர்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரினார். 
இதையேற்ற நீதிபதிகள், காவலர்கள் பணியமர்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதித்ததுடன், இது தொடர்பாக எதிர் மனுதாரர்களுக்கு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT