சுகாதாரத் திட்டத்தில் மோசடியைக் கண்டறிய வலிமைமிக்க ஆக்கப்பூர்வ வழிமுறையை செயல்படுத்தி வருவதாக மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்விநேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பி விருதுநகர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பி.மாணிக்கம் தாகூர் பேசுகையில், "2006-இல் ஆந்திரத்தில் தொடங்கப்பட்ட சுகாதாரத் திட்டத்தை மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டத்தில் 1.57 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் மூன்றாவது நபர் காப்பீட்டில், காப்பீட்டு நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. தனியார் நிறுவனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியமாக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பதில் அளித்துப் பேசுகையில், "இந்தத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுவதில்லை. மாநில அரசுகள்தான் மேற்கொண்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட தொகை குறித்த விவரம் எங்களிடம் இல்லை. முழு திட்டத்தில் ஏதாவது மோசடி அல்லது ஊழல் உள்ளதா என்பது குறித்து மக்களிடமிருந்து இருந்து கருத்துகளைப் பெறும் முயற்சியாக ஒரு வலிமைமிக்க ஆக்கப்பூர்வ வழிமுறையை வைத்திருக்கிறோம். மேலும், 7 ஆயிரம் மருத்துவமனைகளுக்கு ஏழு கேள்விகளுடன்கூடிய ஆக்கப்பூர்வமான மின்னஞ்சலை அனுப்பியுள்ளோம். அதில், மருத்துவமனைகளின் பில்களுக்கு ஒப்புதல் பெற்றுத் தருவதாகக் கூறி யாராவது அவர்களை அணுகினார்களா அல்லது ஏதாவது மோசடியை மருத்துவமனைகள் கண்டறிந்தனவா என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பதிலும் வரப்பெற்றுள்ளன. அவர்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பிரச்னை ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். சிலர் சில பிரச்னைகள் குறித்து கூறியுள்ளனர். அவை குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.