தமிழ்நாட்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் தள்ளுபடியும் செய்தது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், "ஆசிரியர்கள் பொது இடமாறுதல் நிர்வாக காரணங்களுக்காக நடைபெறவும், இடமாறுதலுக்கான காரணம் அந்த ஆசிரியரின் பணி பதிவேட்டில் பதிவு செய்யப்படவும் வேண்டும். ஆனால், 2018-19ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது கலந்தாய்வு விதிப்படி நடைபெறாமல், ஊழல் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. விதிகளை மீறி பல இடமாறுதல்கள் நடைபெற்றுள்ளன. இதனால், பிற மாவட்டங்களில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற இயலாமல், மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆனால், வெறும் 5 மாதங்கள் மட்டுமே பிற மாவட்டங்களில் பணியாற்றியவர்கள், லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டங்களுக்கு இட மாறுதல் பெற்றுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பான அரசாணை எண் 403 அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.
ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆசிரியர் பொது இடமாறுதலில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட மறுத்துவிட்டது. மேலும் இது தொடர்பாக 23 வழிகாட்டுதல்களை வழங்கியது.
இந்த உத்தரவுக்கு எதிராக கே.கே. ரமேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வெள்ளிக்கிழமை எடுத்துக்கொண்டது.
மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் சி.ஆர். ஜெய சுகின் ஆஜராகி, "ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பெறப்படுகிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரினார். அப்போது, இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், விசாரிக்க விரும்பவில்லை என கூறி தள்ளுபடி செய்தனர்.