புதுதில்லி

தெரு வியாபாரிகள் இறைச்சி விற்க எந்தச் சட்டத்தின்கீழ் உரிமம் தேவை? மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

22nd Jul 2019 07:09 AM

ADVERTISEMENT

தெரு வியாபாரிகள் இறைச்சி மற்றும் இறைச்சி தயாரிப்புகள் விற்பதற்கு எந்தச் சட்டத்தின்கீழ் உரிமம் தேவை என வடக்கு தில்லி மாநகராட்சிக்கு தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக விவரம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு,  "உரிமம் இல்லாமல் தெரு வியாபாரிகள் இறைச்சி விற்பதை தடுக்கும் சட்டம் எது? இந்த விவகாரத்தில், கொள்கைத் திட்டம் ஏதும் உங்களிடம் (மாநகராட்சி) உள்ளதா' என்று கேள்வியெழுப்பினார். 
நீதிமன்ற விசாரணையின்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மோனிகா அரோரா, "இறைச்சி விற்பதற்கான உரிமம் பெறுவதற்கு ஏதாவது சட்டம் இருந்தால் அது தொடர்பான  விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்' என கோரினார்.
இதையடுத்து,  உரிமம் இல்லாமல் தெரு வியாபாரிகள்  இறைச்சி அல்லது இறைச்சி தயாரிப்புகள் விற்பதைத் தடுக்கும் சட்டம் குறித்து தெரிவிக்க திங்கள்கிழமை வரை அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
தில்லியில் மகேந்திர பார்க் பகுதியில் தெருவோரம் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு ஆதரவாக தெரு வியாபாரிகள் சங்கத்தினர் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர்.  அதில், "தெருவியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாப்பு மற்றும் தெரு விற்பனை  ஒழுங்குமுறை விதிகள் சட்டம் 2014'-இன் கீழ் விற்பனை சான்றிதழ் வழங்கப்படும் வரை தெரு வியாபாரிகளை மகேந்திர பார்க் பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது' என அதில் கோரியிருந்தனர்.
மேலும், இச்சட்டத்தின்படி சர்வே நடத்தப்படாவிட்டாலோ, ஒரு திட்டத்தை உருவாக்காவிட்டாலோ தெரு வியாபாரிகளை அப்புறப்படுத்த முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது,  மாநகராட்சி வழக்குரைஞர் அரோரா முன்வைத்த வாதத்தில்,  "நடைபாதையில் அமர்ந்து வியாபாரத்தில் ஈடுபடும் தெரு வியாபாரிகளால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் அசௌகரியம் ஏற்படுகிறது' என்றார்.
முன்னதாக, தெரு வியாபாரிகள் இறைச்சி மற்றும் இறைச்சி தயாரிப்புகளை சுகாதாரமற்ற முறையில் விற்பதால் அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவது தேவையாக உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT