புதுதில்லி

தில்லி பாஜக முன்னாள் தலைவர் மாங்கே ராம் கர்க் மறைவு

22nd Jul 2019 07:08 AM

ADVERTISEMENT

தில்லி பாஜக முன்னாள் தலைவர் மங்கே ராம் கர்க்  (83) ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வடக்கு தில்லியின் பஸ்சிம் விஹார் பகுதியில் உள்ள ஆக்ஸன் பாலாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் மங்கே ராம் கர்க் காலமானார். முதுமை காரணமாக, அவர் உடல்நலம் குன்றியிருந்தார். அவரது உடல் அசோக் விஹாரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, தில்லி பாஜக அலுவலகம் அமைந்துள்ள பந்த் மார்க் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர், தில்லி பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட கர்க் உடலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி,  கட்சியின் தேசிய துணைத் தலைவர் சிவராஜ் சிங் சௌஹான், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ், தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி மற்றும் ஏராளமான தொண்டர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
ஏற்கெனவே மாங்கே ராம் கர்க் தனது உடல் உறுப்புகளை "தாட்சிணி தே தான் சமதி'க்கு தானம் தருவதாக உறுதியளித்திருந்தார். இதனால், அவரது உடல் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 
மறைந்த மாங்கே ராம் கர்க், 2003 முதல் 2008 வரை தில்லி வாஸிர்பூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். கட்சியில் பொருளாளர், மாவட்ட தலைவர், தில்லி பாஜக தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது மனைவி அங்கூரி தேவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
பிரதமர் மோடி இரங்கல்: தில்லியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கட்சித் தொண்டராக தன்னலமற்ற வகையில் மக்களுக்கு மாங்கே  சேவை செய்ததாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: 
மாங்கே ராம் கர்க் தில்லியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மேலும், தில்லி மக்களுக்கு தன்னலமற்ற வகையில் அவர் சேவையாற்றினார். தில்லியில் பாஜகவை வலுப்படுத்த அவர் முக்கிய பங்களிப்பு செய்தவர். 
அவரது மறைவு எனக்கு சோகத்தை அளித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் மாங்கே ராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT