புதுதில்லி

வழிப்பறியைத் தடுத்த இளைஞர் குத்திக் கொலை

15th Jul 2019 12:12 AM

ADVERTISEMENT

வழிப்பறியைத் தடுத்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறார் ஒருவரும், இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:  டிஃபன்ஸ் காலனியில் ஒரு விபத்து நடந்துள்ளதாக போலீஸுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தகவல் கிடைத்தது. 
இதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால், அப்பகுதியில் சென்ற ஒரு வேன் ஓட்டுநர், விபத்தில் காயமடைந்தவரை எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளார். 
இதில் மார்பு பகுதியில் பலத்த கத்திக் குத்துக் காயமடைந்த ஷியாம் போத் ஷா, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்லா முபாரக்பூர் பகுதியைச் சேர்ந்த போலா நகரில் சிறார் ஒருவரும் அவருடன் ஹட்கோ பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ரத்தக் கறை படிந்த அவர்களது சட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 
இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உணவகத்தில் வேலை பார்த்து வந்த கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்தவ ஷியாம் போத் ஷா, வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.
இருவரும் சேர்ந்து ஷியாம் போத் ஷாவை வழிமறித்து செல்லிடப்பேசியைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றார் அந்த அதிகாரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT