வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ், தெலுகு, மலையாளம் உள்பட 10 பிராந்திய மொழிப் பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தில்லியில் உள்ள பாரதிய வித்யா பவனின் முதல்வர் என்.என். பிள்ளை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "நாட்டின் வடக்கை தெற்குடனும், கிழக்கை மேற்குடனும் இணைக்க மொழிப் பண்பாடு தேவைப்படுகிறது.
ஆகையால், வரும் கல்வியாண்டு முதல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுகு, பெங்காலி, அஸ்ஸாமி, உருது, மராத்தி, ஓடியா, கஷ்மீர் ஆகிய 10 பிராந்திய மொழிப் பாடப் பிரிவுகள் கற்பிக்கப்படும். இந்த மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து தில்லி, என்சிஆர் பகுதிகளில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள் இதன் மூலம் பயன்பெறலாம். மேலும், நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பண்பாட்டை பிராந்திய மொழிகளின் மூலம் பிறரும் தெரிந்து கொள்ளலாம்' என்றார்.
இந்தியாவின் கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்கவும், பிரசாரம் செய்யவும் பாரதிய வித்யா பவன் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் இதற்கு உண்டு. லண்டன், நியூயார்க், சிட்னி, குவைத், தோஹா, அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலும் இதற்கு கிளைகள்
உள்ளன.