சிவப்பு லைன் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள ரிதாலா - தில்ஷாத் கார்டன் இடையே உள்ள 21 ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்பட உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
தில்ஷாத் கார்டன் - ரிதாலா இடையேயான 21 ரயில் நிலையங்களில் வெளியேவும், உள்ளேயும் அழகுப்படுத்தும் பணியும், நவீன வழிகாட்டி பலகைகளும், நவீன தரைகளும் அமைக்கப்பட உள்ளன.
தில்ஷாத் கார்டன், ஜில்மில், மானசரோவர் பார்க் ஆகிய ரயில் நிலையங்களில் இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரயில் நிலையங்களுக்கான ஒப்பந்தப் புள்ளி பணிகள் நடைபெற்ற வருகின்றன.
மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறு அளவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் மறுசீரமைப்பு செய்து நவீன மயமாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஒப்பந்த புள்ளிகள் முடிவடைந்த பின்னர் 9 மாதங்களில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் என்றார்.
வாஜ்பாயால் திறந்து வைக்கப்பட்ட முதல் வழித்தடம்
தீஸ் ஹசாரி - ஷாத்ரா ரயில் நிலையங்களுக்கு இடையேயான 8.2 கி.மீ. தூர சிவப்பு லைன் மெட்ரோ ரயில் வழித்தடம் 2002, டிசம்பர் 24-ஆம் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் திறந்து வைக்கப்பட்டது. இதுதான் தில்லி மெட்ரோவின் முதல் வழித்தடமாகும். கடந்த 17 ஆண்டுகளில் சிவப்பு லைன் மெட்ரோவின் வழித்தடம் 43.72 கி.மீ. தூரத்துக்கு விரிவடைந்துள்ளது. இதில், கிழக்கு தில்லியில் உள்ள தில்ஷாத் கார்டன் முதல் காஜிபாத்தில் உள்ள நியூ பஸ் அட்டா இடையேயான வழித்தடத்தை கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
21 ரயில் நிலையங்கள்
தில்ஷாத் கார்டன்
ஜில் மில்
மானசரோவர் பார்க்
ஷாத்ரா
வெல்கம்
ஷீலம்பூர்
சாஸ்திரி பார்க்
கஷ்மீரி கேட்
தீஸ் ஹசாரி
புல் பங்கஷ்
பிரதாப் நகர்
ஷாஸ்திரி நகர்
இந்தர் லோக்
கன்னையா நகர்
கேஷவ் புரம்
நேதாஜி சுபாஷ் பிளேஸ்
கோஹத் என்கிளேவ்
பீதம்புரா
ரோஹிணி கிழக்கு
ரோஹிணி மேற்கு
ரிதாலா