தில்லியில் உள்ள குடியிருப்பு சொசைட்டிகளின் வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு துணை நிற்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
தில்லியில் உள்ள குடியிருப்பு சொசைட்டிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மகா சம்மேளன் நிகழ்ச்சி தால்கடோரா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். மாநிலங்களவை உறுப்பினர் விஜய் கோயல், தில்லி எம்.பி.க்கள் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், பர்வேஷ் வர்மா, ரமேஷ் பிதூரி, மீனாட்சி லேகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "நாட்டிலுள்ள அனைவருக்கும் வரும் 2022 -ஆம் ஆண்டுக்குள் வீடு வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தில்லியில் உள்ள குடியிருப்பு சொசைட்டிகளின் பிரச்னைகளை விரைந்து தீர்க்க தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். மேலும், யமுனையை தூய்மைப்படுத்தும் பணிகளை தில்லி அரசு சரியாக மேற்கொள்ளவில்லை' என்றார் அவர்.
நிகழ்வில் விஜய் கோயல் பேசுகையில் "மத்திய அரசின் கீழுள்ள தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ), தில்லியில் உள்ள குடியிருப்பு சொசைட்டிகளை அதி நவீன வசதிகளுடன் கட்டமைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கு குடியிருப்பு வாசிகளிடம் கூடுதல் பணம் பெறப்படமாட்டாது. இதன்படி, 1,200 சொசைட்டிகளில் வாழும் சுமார் 10 லட்சம் மக்கள் பயனடைவர். மேலும், குடியிருப்பு சொசைட்டிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு நடத்தவும் டிடிஏ உறுதியளித்துள்ளது' என்றார்.