நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 27 மாதங்கள் காலதாமதம் செய்து விட்டு இப்போது இதனைத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மக்களின் வாக்குகளைப் பெற்று மத்தியில் பதவியில் அமர்ந்திருக்கும் ஓர் அரசு, அதே மக்களின் வாக்குகளைப் பெற்று சட்டப்பேரவையில் அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளை அவமதிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு உகந்த செயல் அல்ல. நீட் தொடர்பான கேள்விகள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டபோதும் அது குறித்து பேசப்பட்ட நேரங்களிலும் இந்த மசோதா குறித்த முடிவினை அவையில் தெரிவிக்காமல் மூடி மறைத்தது நாடாளுமன்ற அவமதிப்பாகும். நீட் மசோதாக்களை நிராகரித்ததை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வைகோ: நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழக அரசின் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிராகரிக்கப்பட்ட தகவல் முதல் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும். ஆனால், அந்தச் செய்தியை மறைத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவோம் என்று தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்த செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.
இரா.முத்தரசன்: நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்து விட்டோம் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒட்டு மொத்த தமிழகத்தையே மத்திய பாஜக அரசு நிராகரித்து, அவமானப்படுத்தியுள்ளது.
மாநில நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம் என முதல்வர் திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், தற்போது என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.