வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (என்பிஎஃப்சி) சொத்துகளை வாங்கும் பொதுத் துறை வங்கிகளுக்கு தேவையான கடன் உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அவர் கூறியிருப்பதாவது:
சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரிவுகளுக்கான மூலதன உருவாக்கத்தில் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. மேலும், நுகர்வுக்கான தேவையை தொடர்ந்து அதிகரிப்பதிலும் அவற்றின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.
மத்திய அரசு இதனை நன்கு உணர்ந்து, சிறப்பான நிதி நிலைமை உள்ள அதிகபட்ச தரக்குறியீடுகளைப் பெற்றுள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களின் சொத்துகளை வாங்கும் பொதுத் துறை வங்கிகளுக்கு ஒரு முறை பகுதி அளவிலான கடன் உத்தரவாதத்தை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.