தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 5 தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா செல்வதற்காக வெள்ளிக்கிழமை வந்திருந்த ஒரு பெண்ணின் உடைமைகள், எக்ஸ்ரே கருவி மூலம் சோதனையிடப்பட்டன. அப்போது, அவரது பையில் 5 தோட்டாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. விமான நிலையத்துக்குள் துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு வர பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
அப்படியிருக்கும்போது, இந்த தோட்டாக்களை கொண்டு வந்தது ஏன்? என்று அந்த பெண்ணிடம் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கேள்வியெழுப்பினர்.
ஆனால், அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த பெண்ணிடமிருந்த தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அந்த அதிகாரி.