மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் தில்லிக்கு சாதகமான அம்சங்கள் இல்லை என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பட்ஜெட் தொடர்பாக மாநில அரசுகள் பங்கேற்ற கூட்டத்தில் தில்லி சார்பில் நான் கலந்து கொண்டேன். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன்.
அப்போது கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்து, ரூ.315 கோடியையே மத்திய அரசு வரிப் பங்காக வழங்கி வருகிறது என்றும் அதை ரூ.6,000 கோடியாக அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை.
2001-ஆம் ஆண்டில் இருந்து தில்லிக்கான மத்திய அரசின் வரிப் பங்கு ரூ.315 கோடியாகவே உள்ளது. ஆனால், 2001 இல் ரூ.8,739 கோடியாக இருந்த தில்லி அரசின் பட்ஜெட், 2019- இல் ரூ.60,000 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 2001 இல் வழங்கிய அதே தொகையை இன்னும் மத்திய அரசின் வரிப் பங்காக வழங்கப்படுவது எந்த வகையில் சரியானது?
தில்லி மாநகராட்சிகளுக்கு ரூ.1,150 கோடியை ஒதுக்குமாறும், தில்லி அரசு மேற்கொள்ளும் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்குத் தொகையையும் அதிகரிக்குமாறும் கோரிக்கை வைத்தோம். அவையும் நிறைவேற்றப்படவில்லை.
ஐஜிஎஸ்டியில் தில்லிக்கு கிடைக்க வேண்டிய பங்கான ரூ.3,202 கோடியையும் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.