புதுதில்லி

ஏமாற்றம் தரும் பட்ஜெட்: திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கருத்து

6th Jul 2019 12:28 AM

ADVERTISEMENT

ஏமாற்றம் தரும் வகையில் மத்திய பொது பட்ஜெட் அமைந்துள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு "தினமணி'யிடம் கூறியதாவது: 
சேலம் உருக்காலையில் பங்குவிலக்கல் அளிக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் தகவல் வந்துள்ளது. இந்நிலையில், பட்ஜெட் உரையில் பங்குவிலக்கல் மூலம் ரூ.1.05 லட்சம் கோடி திரட்டப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பங்குவிலக்கல் நடவடிக்கை வரும் போது சேலம் உருக்காலையும் பங்குவிலக்கலுக்கு உள்ளாகும். அப்பகுதி விவசாயிகள் ஆலைக்கு நிலம் அளித்துள்ளனர். ஏராளமான தொழிலாளர்கள் ஆலையில் வேலை செய்கின்றனர். இந்நடவடிக்கை அவர்களைப் பாதிக்கும். தனியாருக்கு அரசு நிறுவனங்களைத் தாரை வார்க்கும் முயற்சி வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றது. நான் அமைச்சராக இருந்த போது, அதைத் தடுத்து நிறுத்தினேன். தற்போதைய பட்ஜெட்டின் மூலம் சேலம் உருக்காலை பங்குவிலக்கல் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்பதால், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி (செஸ்) விதிப்பதால் விலைவாசி ஏற்றம் ஏற்படும். வாங்கும் சக்தி குறைந்துவிடும். மொத்தத்தில் பணவீக்கத்தை அதிகரிக்கும் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. மேலும், பட்ஜெட்டில் நதிநீர் இணைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. 
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்- சிதம்பரம் தொகுதி உறுப்பினர் திருமாவளவன்: இந்த பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட். கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கான பட்ஜெட். அதை உறுதிப்படுத்தும் வகையில் காப்பீட்டு துறைகளில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழி வகுக்கிறது. ஊடகத் துறைகளிலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிப்பதன் மூலம், அத்துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு ஏற்படும். தங்கத்தின் மீதான கலால் வரியை உயர்த்தி இருப்பதன் மூலம், மேலும் தங்கக் கடத்தல் தீவிரமாகும். எளிய மக்கள் தங்க ஆபரணங்களை வாங்க இயலாத நிலை ஏற்படும். பெட்ரோல், டீசலுக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும். விவசாய மேம்பாட்டுக்கு எந்த அறிவிப்பும் நிதியமைச்சரின் உரையில் இடம் பெறவில்லை. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. தலித், பழங்குடி மக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க இந்த பட்ஜெட் வழிவகுக்கிறது. இது அனைத்துப் பொதுத் துறைகளையும் நாசமாக்கிவிடும். எனவே, இது மக்கள் விரோத பட்ஜெட்டாகும்.
மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் 
டி.ராஜா:  இந்தியாவின் பொருளாதார நிலைகளை, பிரச்னைகளை நேரடியாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, பட்ஜெட் வார்த்தை ஜாலங்களில் உள்ளது. இந்தியாவில் தொழில்துறை நெருக்கடி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் பெரிய அளவில் உள்ளது. விவசாய நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதையெல்லாம் இந்த பட்ஜெட் எதிர்கொள்ளவில்லை. மற்றொருபுறம், நிதி ஆதாரங்களைத் திரட்டுகிற போது அன்னிய முதலீடு, இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகள் முதலீடு, பொதுத் துறை நிறுவனங்களை உத்திசார் முறையில் விற்பனை செய்வது, தனியார்மயமாக்குவது இதுதான் இந்த அரசின் குறிக்கோளாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களைத்
தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு பட்ஜெட்டாகவே இது அமைந்துள்ளதே தவிர, சாமானிய மக்களின் வாழ்க்கை குறித்து அக்கறை கொள்ளும் பட்ஜெட்டாக இல்லை. பெட்ரோல், டீசல் மீதான ஒரு சதவீத கூடுதல் வரி, பணவீக்கத்தையும், விலைவாசியையும் அதிகரிக்கும்.
திருச்சி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசர்: படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எந்த உத்தரவாதமும் பட்ஜெட்டில் தரப்படவில்லை. மேலும்,படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது. அதுபோன்று விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. விவசாயிகள் நலனுக்கான எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஏழைகளுக்கான சுகாதார வசதி திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு எவ்வித நன்மையும் பயக்காத பட்ஜெட் இது. மாநிலங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் பட்ஜெட்டாகவும் அமையவில்லை என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT