ஆந்திர மாநிலம், பள்ளிப்பாடு கிராமத்தில் அமைந்துள்ள பினாகினி சத்யாகிரக ஆஸ்ரமத்தைப் புனரமைக்க ரூ.2.80 கோடியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரபாகர் ரெட்டி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் நேரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கை: பள்ளிப்பாடு கிராமத்தில் உள்ள பினாகினி சத்யாகிரக ஆஸ்ரமத்தை 1921-இல் மகாத்மா காந்தி திறந்துவைத்தார். இந்த ஆஸ்ரமம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டங்களுடன் தொடர்புடையது. பெண்ணாறு நதிக் கரையில் அமைந்துள்ள இந்த ஆஸ்ரமம், தென்னிந்தியாவின் சமர்பதி ஆஸ்ரமம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த ஆஸ்ரமத்தை மேம்படுத்தவும், அருங்காட்சியகமாக்கவும் ரூ.2.80 கோடி நிதி தேவைப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் பராமரிக்க ரூ.14 லட்சம் நிதி தேவைப்படுகிறது. மகாத்மா காந்தியின் 150-ஆவது ஜெயந்தியைக் கொண்டாடும் இந்த வேளையில், இந்த ஆஸ்ரமத்தை புனரமைக்க ரூ.2.80 கோடி நிதியை மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை ஒதுக்க வேண்டும். மேலும், காந்தி பாரம்பரிய இடங்கள் திட்டத்தில் பினாகினி சத்யாகிரக ஆஸ்ரமத்தைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அவர்.