தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் பிளாஸ்டிக் உற்பத்தித் தொழிற்சாலையில் திங்கள்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாரும் சிக்கியுள்ளதாகத் தகவல் இல்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: நொய்டாவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தீ விபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, உடனடியாக 12 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். தொழிற்சாலைகள் நிறைந்த அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இது குறித்து நொய்டா பேஸ்-2 காவல் நிலைய அதிகாரி ஃபர்மூத் அலி புந்திர் கூறுகையில், "இந்தத் தீ விபத்தில் இதுவரை யாரும் சிக்கியதாகத் தகவல் இல்லை' என்றார்.
எய்ம்ஸ் வளாகத்தில் தீ: தில்லி எய்ம்ஸ் வளாகத்தில் காய சிகிச்சைப் பிரிவு செயல்படும் பகுதியில் உள்ள ஏடிஎம் மையம் மற்றும் கேண்டீனில் திங்கள்கிழமை சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. இது தொடர்பாக பிற்பகல் 3.14 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் பிற்பகல் 3.50 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.