காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் துரப்பண விவகாரம் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மக்களவையில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு, உருக்குத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மக்களவையில் திங்கள்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் பூஜ்யநேரத்தில் எண்ணெய் துரப்பணம் திட்டம் தொடர்பான விவகாரத்தை மக்களவைத் திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு எழுப்பினார்.
அப்போது, அவர் பேசுகையில், "தமிழகத்தின் டெல்டா விவசாயிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக கதிராமங்கலம், நெடுவாசல் பகுதி கிராமத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல தலைவர்கள் அவர்களை சமாதனம் செய்ய முயன்றனர். ஆனால், மக்கள் சமாதனம் அடையவில்லை. கடந்த 50-60 ஆண்டுகளாக காவிரி டெல்டா படுகைப் பகுதியில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் உற்பத்தியான எண்ணெய்யில் வெறும் 0.6 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. எனவே,
இத்திட்டத்தால் நிதிப் பயன் விகிதம் அல்லது சமூகப் பொருளாதார வருவாய் விகிதம் தொடர்பான விவரங்களை அரசு ஆராய்ந்ததா என்பது குறித்து பெட்ரோலிய அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன்.
இத்திட்டத்துக்கான துளையிடும் பணி 341 இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து வந்துள்ள அனைவரும் ஏறக்குறைய விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள். எங்கள் மக்களின் நலனுக்கு எதிரான இதுபோன்ற செயல்பாடுகளைத் தடுக்க ஒட்டுமொத்த தமிழகமும் சேர்ந்து போராடும்' என்றார்.
அமைச்சர் பதில்: இதற்கு பெட்ரோலியம் இயற்கை எரிவாயு, உருக்குத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துப் பேசியதாவது: துரப்பணப் பணியானது தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு நடவடிக்கையாகும். இது தொடர்பாக சில கவலைகளும், ஐயங்களும் தமிழகத்தின் ஒரு பிரிவு விவசாயிகளால் எழுப்பட்டுள்ளன. அதை நான் வரவேற்கிறேன். நானும் கூட ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி இருந்த போது, விவசாயிகள் பிரதிநிதிகள் குழுவினருடன் என்னைச் சந்திக்க வந்தார். தமிழகத்தின் இது தொடர் கவலையாக இருந்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மூத்த தலைவர்களையும் அழைத்து இது குறித்து விவாதிப்போம்.
தமிழக அரசும் இதே கருத்தைக் கொண்டுள்ளது. நீங்களும் இதே கருத்தைக் கொண்டுள்ளீர்கள். இது தேசிய விவாதம். இந்த விஷயத்தில் மத்திய அரசு கட்டாயப்படுத்தப் போவதில்லை. நாம் வெளிப்படையாக விவாதத்தை மேற்கொள்வோம். அப்போதுதான் சில வழிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றார்.