தில்லி அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்குத் தொடர்புள்ளதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் 300 சதுர அடியுள்ள வகுப்பறை ஒன்றைக் கட்ட ரூ.24.86 லட்சத்தை தில்லி அரசு செலவு செய்துள்ளது. இதுபோன்ற மொத்தம் 12,782 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு, மொத்தம் ரூ.2,892 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு சதுர அடி வகுப்பறையைக் கட்டுவதற்கு ரூ.8,800 வீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைக் கட்டும் போது கூட ஒரு சதுர அடிக்கு ரூ.5,000-க்கு மேல் செலவு ஆவதில்லை. உண்மையில், இந்த 12,782 வகுப்பறைகளையும் ரூ.800 கோடிக்கு கட்டியிருக்கலாம். இதன்மூலம் ரூ. 2,000 கோடி ஊழல் நடந்துள்ளது.
இந்த வகுப்பறைகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு நெருக்கமான 34 ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வகுப்பறைகள் கட்ட தரம் குறைந்த பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஊழலில் முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு நேரடித் தொடர்பு உள்ளது.
இந்த ஊழல் தொடர்பான விவரங்களை லோக்பால் முன் சமர்பிக்கவுள்ளோம். இந்த விவகாரத்தில் தில்லி கல்வியமைச்சர் மணீஷ் சிசோடியா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றார் மனோஜ் திவாரி.
சிசோடியா மறுப்பு
பாஜகவின் இந்த குற்றச்சாட்டுகளை துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் ஊழல் செய்திருந்தால் என்னைக் கைது செய்ய மனோஜ் திவாரி உடனடியாக நடவடிக்கை எடுக்கட்டும். கைது செய்யாவிட்டால், பொய்யான தகவல்களைப் பரப்பியதற்காக தில்லி மக்களிடமும், மாணவர்களிடமும் மனோஜ் திவாரி மன்னிப்புக் கோர வேண்டும். உண்மையில், ரிக்ஷா ஓட்டுநரின் மகன், கூலித் தொழிலாளியின் மகன் ஆகியோர் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை அரசு பள்ளிகளில் கற்பது பாஜகவுக்கு பிடிக்கவில்லை' என்றார்.
உடனே கைது செய்யுங்கள் - கேஜரிவால்
முதல்வர் கேஜரிவால் கூறுகையில் "தில்லி போலீஸ், வருமான வரித் துறை உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசிடமே உள்ளன. வகுப்பறைகள் கட்டியதில் ஊழல் இருந்தால், எங்களை உடனே கைது செய்யட்டும். அரசியல் லாபங்களுக்காக ஏழை மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என்றார்.