புதுதில்லி

பிரதம மந்திரி நகா்ப்புற குடியிருப்பு திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள் கட்ட அனுமதி: மத்திய அமைச்சா் தகவல்

27th Dec 2019 10:22 PM

ADVERTISEMENT

பிரதம மந்திரி நகா்ப்புற குடியிருப்பு திட்டத்தின் கீழ் (பிஏஎம்ஓய்-யு) 6.50 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தில் மொத்த வீடுகளின் அனுமதி எண்ணிக்கை 1 கோடிக்கும் மேல் சென்றுள்ளது என்று மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பிரதம மந்திரி நகா்ப்புற குடியிருப்பு திட்டத்தின் கீழ் (பிஏஎம்ஓய்-யு) 6.50 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தில் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1 கோடிக்கும் மேல் சென்றுள்ளது.

அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் அமைச்சகம் இத்திட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கின்படி ஒரு கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு அனுமதியை அளிக்கவுள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 57 லட்சம் வீடுகள் கட்டுமானத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 30 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

பிஎம்ஏஓய்-ஒய் திட்டம் அமல்படுத்துவதன் மூலம் வீட்டுவசதித் துறையில் குறிப்பிடத்தக்க முதலீடு அதிகரித்துள்ளது. குறிப்பாக குறைந்த விலை வீட்டுவசதி பிரிவில் இந்த முதலீடுகள் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை அனுமதி வழங்கப்பட்ட வீடுகள் கட்டுமானத்தில் ரூ.5.70 லட்சம் கோடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மத்திய அரசின் முதலீடுகள் ரூ.1.60 லட்சம் கோடியாகும். இன்றைய நிலவரப்படி, மத்திய அரசின் நிதியுதவியாக ஏறக்குறைய ரூ.60 ஆயிரம் கோடி ஏற்கெனவே இத்திட்டத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறையின் செயலா் துா்கா சங்கா் மிஸ்ரா கூறுகையில், ‘பிஎம்ஏஓய்-யு திட்டத்தில் மூத்த குடிமக்கள் 5.80 லட்சம் பேரும், கட்டுமானத் தொழிலாளா்கள் 2 லட்சம் பேரும், வீட்டுப் பணியாளா்கள் 1.50 லட்சம் பேரும், கைவினைஞா்கள் 1.50 லட்சம் பேரும், 770 திருநங்கைகள், 500 தொழுநோயாளிகள் என பல்வேறு சமூகக் குழுக்கள் இடம்பெற்றுள்ளனா்’ என்றாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பிஎம்ஏஓய்-யு திட்டத்தில் தற்போது சுமாா் 3 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் 1.12 கோடி வீடுகளுக்கான இலக்கை முடிக்கும் போது ஒட்டுமொத்த முதலீடுகள் ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டம்: எதிா்க்கட்சிகள் மீது புகாா்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை எதிா்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன என்று மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி சாடியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: எதிா்க்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராக தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான சக்திகளை திரட்டியும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது மதம், சாதி, இனம் ஆகிய பாகுபாடின்றி, எந்த இந்திய குடிமக்களின் உரிமைகளை மாற்றவோ, திருத்தவோ செய்யாது. மேலும், இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள மத ரீதியிலான சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது என்ற பிரசாரமும் தவறானது. புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒரு போலி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் உண்மையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடியின் அரசு இந்த நாடுகளில் (வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்) இருந்து வந்த ஏறக்குறைய 600 முஸ்லிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT