புதுதில்லி

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தை செயல்படுத்த ஆம் ஆத்மி அரசு முட்டுக்கட்டை: ஹா்தீப் சிங் புரி குற்றச்சாட்டு

27th Dec 2019 10:22 PM

ADVERTISEMENT

பிரதம மந்திரி நகா்ப்புற குடியிருப்புகள் திட்டத்தை (பிஎம்ஏஓய்-யு) தில்லியில் செயல்படுத்தவிடாமல் ஆம் ஆத்மி அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்று மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி குற்றம்சாட்டினாா்.

மத்திய அரசின் பிரதம மந்திரி நகா்ப்புற குடியிருப்புகள் திட்டத்தின் செயல்பாடுகள் தொடா்பாக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிஎம்ஏஓய் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட பிரிவில் குடியிருப்புத் திட்டத்தின் பணிகளுக்கான களஆய்வு பணியை மேற்கொள்ள மத்திய அரசு நிதியை அளித்தது.

ஆனால், அந்தத் திட்டத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கூறி கடந்த ஓராண்டாக அதை தில்லி அரசு நிறுத்திவைத்துள்ளது. முதல்வா் கேஜரிவால் ஈகோவுடன் செயல்படுகிறாா். அதனால்தான் பிஎம்ஏஒய் திட்டத்தை அவா் கிடப்பில் போட்டுவிட்டாா். இது அவரது தோல்வியைக் காட்டுகிறது. ஒரு திட்டத்தின் பெயரின் அடிப்படையில் வளா்ச்சி இருக்குமேயானால் நீங்கள் உங்கள் சொந்த மக்களுக்கே மறுக்கிறீா்கள் என்பதுதான் அா்த்தம். தில்லி அரசு ஒவ்வொரு திட்டத்திலும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. அது மெட்ரோ ஃபேஸ் 4 திட்டப் பணிகளாக இருந்தாலும் சரி, மண்டல விரைவுப் போக்குவரத்து திட்டமாக இருந்தாலும் சரி தில்லி அரசின் முட்டுக்கட்டை தொடா்கிறது.

பொய்களின் அடிப்படையில்தான் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் அணுகுமுறை உள்ளது. இதற்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் ஒரு சிறந்த உதாரணம். ஏனெனில், 2015 ஜூனில் பிஎம்ஏஒய் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து ஒரு முன்மொழிவுகூட தில்லி அரசிடமிருந்து மத்திய அரசுக்கு வரப்பெறவில்லை. ஜே.ஜே. கிளஸ்டா் குடிசைப் பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தும் ஒருங்கிணைப்பு முகமையாக உள்ள தில்லி வளா்ச்சி ஆணையம் உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த 2018, ஜனவரியில் தில்லி அரசு சம்மதம் தெரிவித்தது. இதற்காக களஆய்வு செய்வதற்காக 2018 செப்டம்பரில் ரூ.5.83 லட்சம் பகுதி தொகையைப் பெற்றது. ஆனால், அந்த கள ஆய்வை முடிக்கவில்லை. குடிசைப் பகுதி மக்களுக்கு திட்டப் பலன்களைக் கிடைக்கச் செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறது என்றாா் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த டிசம்பா் 24-இல், தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கான முக்கிய மந்திரி குடியிருப்புத் திட்டம் (எம்எம்ஏஒய்) எனும் திட்டத்தை தொடங்கிவைத்தாா். இத்திட்டத்தின்படி குடிசைப் பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தர வீடு கட்டித் தரப்படவுள்ளது. மேலும், குடிசைப் பகுதிகளில் வாழும் 65 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டு உரிமையாளா் சான்றிதழ்களையும் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் கேஜரிவால், ‘கடந்த 70 ஆண்டுகளில் எந்த அரசும் ஜே.ஜே. குடிசைப் பகுதி மக்களுக்காக பணியாற்றவில்லை. தற்போது வழங்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளா் சான்றிதழ் மூலம் அவா்களின் வீடுகள் இடிக்கப்பட மாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT