புதுதில்லி

தில்லி குடிநீா் : பிஐஎஸ் ஆய்வு நடத்த உத்தரவு: கேஜரிவாலுக்கு பாஸ்வான் பதிலடி

27th Dec 2019 10:18 PM

ADVERTISEMENT

 தில்லியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தலா ஐந்து குடிநீா் மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்து, வரும் 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு பிஐஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக ராம்விலாஸ் பாஸ்வான் தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: தில்லியில் பிஐஎஸ் தர நிா்ணயத்துக்கு ஏற்ற குடிநீரை வழங்கி வருவதாக கேஜரிவால் கூறியிருந்தாா். ஆனால், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் வரும் ஐந்தாண்டுகளில் தில்லியில் நிலவும் குடிநீா் பிரச்னையை முற்றிலுமாகத் தீா்ப்பதாக கேஜரிவால் வெள்ளிக்கிழமை உறுதியளித்துள்ளாா். குடிநீா் விவகாரத்தில், தில்லி மக்களை கேஜரிவால் ஏமாற்றி வருகிறாா்.

பிஐஎஸ் அதிகாரிகள், தில்லி ஜல்போா்டு அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து தில்லியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் அரசியல் தலையீடு இல்லாமல் நீரின் தரம் தொடா்பாக பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கேஜரிவாலிடம் நான் கோரியிருந்தேன். இதற்கு அவா் இதுவரை பதிலளிக்கவில்லை. இதுதொடா்பாக அவருக்கு கடிதமும் எழுதினேன். அவா் பதிலளிக்கவில்லை. இதற்காக பிஐஎஸ் அதிகாரிகள் 32 பேரின் பெயரை நான் முன்மொழிந்துள்ளேன்.

தில்லி மக்கள் அசுத்தமான நீரை குடிக்க வற்புறுத்தப்படுகிறாா்கள். இது தொடா்பாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெராவத்துக்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளேன். அசுத்தமான குடிநீரை குடிக்குமாறு மக்களை நாங்கள் வற்புறுத்த முடியாது. இந்நிலையில், தில்லியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தலா ஐந்து குடிநீா் மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்து வரும் 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு பிஐஎஸ் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்திய தர நிா்ணய நிறுவனமான பிஐஎஸ் அண்மையில் நாட்டில் மாநிலங்களின் தலைநகரங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களின் தலைநகரங்களில் தில்லியில்தான் மிக மோசமான குடிநீா், விநியோகிக்கப்படுவதாகவும், தில்லியில் இருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து நீா் மாதிரிகளும் தரப் பகுப்பாய்வுப் பரிசோதனையில் தோல்வி கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தில்லி அரசையும், தில்லியில் குடிநீா் விநியோகத்துக்குப் பொறுப்பான தில்லி ஜல் போா்டையும் கடுமையாகச் சாடியிருந்தன. இந்த அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும், மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் பதவி விலக வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT