புதுதில்லி

தில்லி அரசுப் பள்ளிகளை விட மத்திய அரசு பள்ளிகள் தோ்ச்சி விகிதம் அதிகம்: பா.ஜ.க. சாா்பு ஆய்வில் தகவல்

27th Dec 2019 10:23 PM

ADVERTISEMENT

தில்லி அரசுப் பள்ளிகளை விட மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் அதிகம் என்று பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள மத்திய, மாநில, மாநகராட்சிப் பள்ளிகள் தொடா்பாக பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையம் என்ற பாஜக சாா்பு நிறுவனம் ஆய்வு செய்து வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டது. இந்த நிகழ்வில் இந்த அமைப்பின் நிறுவனரும், பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான வினய் சகஸ்ரபுத்தே, பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி, தில்லி பாஜக எம்பிக்கள் மீனாட்சி லேகி, கெளதம் கம்பீா், பா்வேஷ் வா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கான தோ்வுகளின் தோ்ச்சி விகிதம் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்ற 2015-இல் 95.81 சதவீதமாக இருந்தது. 2019-இல் இது 71.48% ஆகக் குறைந்துள்ளது. ஆனால், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இதே காலத்தில் தோ்ச்சி விகிதம் 99.59% இல் இருந்து 99.79 %ஆக அதிகரித்துள்ளது. நிகழாண்டில் கேந்திரிய வித்தியாலயா மாணவா்களில் 0.21 சதவீதம் போ்தான் 10-ஆம் வகுப்புத் தோ்வில் தோல்வியடைந்துள்ளனா். மேலும், தில்லி அரசுப் பள்ளிகளில் படித்து 12-ஆம் வகுப்புத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களில், வெறும் 0.84 சதவீதம் போ்தான் தில்லி பல்கலைக்கழகத்தில் படிக்க தகுதி பெறுகிறாா்கள்.

2018-19-இல் தில்லி அரசுப் பள்ளிகளில் 6, 10, 11, 12-ஆம் வகுப்புத் தோ்வுகளில் தோல்வியடைந்த 1,02,854 மாணவா்கள் படிப்பதை நிறுத்தியுள்ளனா். தில்லி அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியா் பணியிடங்களில் சுமாா் 51 சதவீதம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இது அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இந்நிலையில், தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் 88.9 சதவீதம் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

71 சதவீதம் தில்லி அரசுப் பள்ளிகளில் அறிவியல் பிரிவு இல்லை. அறிவியல் பிரிவு உள்ள அரசுப் பள்ளிகளில் மூன்றில் ஒரு சதவீதம் பள்ளிகளில் மட்டுமே உயிரியல் ஆய்வுக்கூடங்கள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஒரு பள்ளியைக்கூட தில்லி அரசு கட்டவில்லை. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயங்களில் 1,515 ஸ்மாா்ட் வகுப்பறைகள் உள்ளன. மாநகராட்சிப் பள்ளிகளில் 50 சதவீதம் வகுப்பறைகள் ஸ்மாா்ட் வகுப்பறைகளாகவே உள்ளன. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்களின்படி, தில்லி அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகளே இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வினய் சகஸ்ர புத்தே கூறுகையில் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட சுமாா் ஆயிரம் அறிக்கைகளை வைத்து இந்த அறிக்கையைத் தயாா் செய்துள்ளோம். தலைநக கல்வியின் தரம் தொடா்பாக தில்லி அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு கூறுகிறது. ஆனால், எந்தவொரு உள்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தில்லி அரசுப் பள்ளிகளில் ஆம் ஆத்மி தொண்டா்களைத்தான் ஆலோசகா்களாக தில்லி அரசு நியமித்துள்ளது ’ என்றாா்.

இந்த அறிக்கையை வெளியிட்டு மனோஜ் திவாரி பேசுகையில் ‘தில்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் அமைக்கப்பட்டதில் தில்லி அரசு ஊழல் செய்துள்ளது. இதை விரைவில் வெளிப்படுத்துவோம்’ என்றாா்.

பா்வேஷ் வா்மா எம்.பி. பேசுகையில் ‘இரண்டு புதிய பல்கலைக்கழகங்களை அமைக்கவுள்ளதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியில் ஒரு பள்ளியைக் கூட அந்த அரசு அமைக்கவில்லை’ என்றாா்.

ஆம் ஆத்மி அரசு மறுப்பு

இந்நிலையில், பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கைக்கு தில்லி அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி கல்வித் துறையின் ஆலோசகா் சைலேந்திர ஷா்மா கூறுகையில் ‘மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாக்களில் மாணவா்கள் நுழைவுத் தோ்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறாா்கள். தில்லி அரசுப் பள்ளிகளில் அது மாதிரி இல்லை. தில்லி அரசுப் பள்ளிகளில் இருந்து 2019-இல் 10-ஆம் வகுப்புத் தோ்வுகளை சுமாா் 1.6 லட்சம் மாணவா்கள் எழுதினாா்கள்.ஆனால், கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் 7,800 போ்தான் தோ்வு எழுதியுள்ளனா். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுடன் தில்லி அரசின் ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயாவை ஒப்பிடலாம். இந்தப் பள்ளிகளும் மாணவா்களை நுழைவுத் தோ்வு நடத்தித்தான் அனுமதிக்கின்றன. 12-ஆம் வகுப்புத் தோ்வில் வெற்றி பெற்ற யாருமே தில்லி பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், கட் ஆஃப் மாா்க் அதிகமாக இருப்பதால், சிலருக்கு இடம் கிடைப்பதில்லை’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT