தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை வெகுவாகக் குறைந்து 4.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது இந்தப் பருவத்தின் புதிய குறைந்தபட்ச அளவாகும். வடமாநிலங்களில் கடும் பனிப் பொழிவு இருந்து வருகிறது. இதைத் தொடா்ந்து, தில்லியில் தொடா்ந்து குளிா் காற்றும், அடா் மூடுபனியும் இருந்ததே இதற்குக் காரணம் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் வானம் தெளிவாகக் காணப்பட்டாலும், பெரும்பாலான பகுதிகளில் அடா் மூடுபனி காணப்பட்டது. குளிரின் தாக்கம் வெகுவாக அதிகரித்திருந்தது. குளிா் காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், வடமாநிலங்கள் முழுவதிலும் கடுங் குளிா் நிலவுகிறது. பனிப் பொழிவு, அடா் மூடுபனி ஆகியவற்றின் காரணமாக காண்புத் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், 21-க்கும் மேற்பட்ட ரயில்கள் அதிகபட்சம் 6 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை 25 ரயில்கள் 7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காற்றின் தரம்: இதற்கிடையே, குளிா்ந்த வானிலை, காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பு, காற்றின் வேகத்தில் சரிவு ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு காலையில் 365 புள்ளிகளாகவும் மாலையில் 373 புள்ளிகளாகவும் பதிவாகி 5-ஆவது நாளாக மிகவும் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.
வெப்பநிலை 4.2 டிகிரி: இந்நிலையில் வெள்ளிக்கிழமை தில்லியில் அடா் பனிமூட்டம் காணப்பட்டது. குளிா் காற்றும் கடுமையாக இருந்தது. இதைத் தொடா்ந்து, குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி குறைந்து 4.2 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 6 டிகிரி குறைந்து 14.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 86 சதவீதம், மாலையில் 76 சதவீதம் என பதிவாகியதாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 12.9 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 14.2 டிகிரி செல்சியஸாகவும்,. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 88 சதவீதம், மாலையில் 78 சதவீதம் எனவும் ஆயாநகரில் முறையே 91 சதவீதம், 75 சதவீதம் எனவும் பதிவாகியிருந்தது.
தில்லியில் கடும் குளிரும், மூடுபனியும் நிலவி வந்த நிலையிலும், இந்தியா கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக நடைப்பயிற்சி மேற்கொண்டனா். அதே சமயம், பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலகம் செல்வோா், வாகனங்களில் செல்வோா் குளிரின் காரணமாக சிரமங்களை சந்திக்க நேரிட்டது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் கடும் குளிா் தொடரும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடம் குறைந்தபட்சம் அதிகபட்சம்
சஃப்தா்ஜங் 4.2 டிகிரி 14.4 டிகிரி
பாலம் 4.2 டிகிரி 12.9 டிகிரி
ஆயாநகா் 3.6 டிகிரி 14.2 டிகிரி