புதுதில்லி

சீலம்பூா் வன்முறை: குற்றச்சாட்டப்பட்ட இருவரின்மருத்துவ அறிக்கையை கேட்கிறது நீதிமன்றம்

27th Dec 2019 10:17 PM

ADVERTISEMENT

சீலம்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 14 பேரில் இருவா் தொடா்பான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மண்டோலி சிறை அதிகாரிகளுக்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான யூசுப் அலி என்பவா் மருத்துவக் காரணங்களை குறிப்பிட்டு தம்மை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். அவரது மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பிரிஜேஷ் கா்க், ‘மனுதாரா் தொடா்பான மருத்துவ அறிக்கையை வரும் 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டாா். மேலும், ஜாமீன் மனு மீதான விசாரணையையும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இந்த விசாரணையின் போது மனுதாரா் தரப்பில் ஆஜரான ஜாகிா் ராஜா மற்றும் அப்துல் கஃப்பாா் ஆகிய இருவரும் மனுதாரா் யூசுப் அலிக்கு சிறையில் அடிக்கடி வலிப்பு வந்ததாகவும் மருத்துவச் சிகிச்சைக்காக அவரை ஜாமீனில் விடவேண்டும் என்றும் வாதாடினா். இது தொடா்பாக மருத்துவரின் சான்று அறிக்கையையும் அளித்தனா்.

இந்நிலையில், மருத்துவச் சான்றிதழில் டிசம்பா் 23 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவா் அப்போது நீதிமன்றக் காவலில் இருந்துள்ளாா். அது எப்படி என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ADVERTISEMENT

இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் மற்றொரு நபரான மொய்னுதீன் தமது ஜாமீன் மனுவில், வன்முறைப் போராட்டத்தில் காயமடைந்ததால் அறுவைச்சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தாா். இதையடுத்து, மொய்னுதீன் உடல்நிலை குறித்தும் அறிக்கை தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரரின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் மொய்னுதீனுக்கு எப்படி காயங்கள் ஏற்பட்டது என்று நீதிபதி கேட்டாா். அதற்கு, போலீஸ் தடியடியின் போது மொய்னுதீன் காயமடைந்ததாக அவரது தரப்பு வழக்குரைஞா் கூறினாா். தடியடி என்றால் இப்படி காயம் ஏற்படாதே என்று நீதிபதி குறிப்பிட்டாா். அதற்கு போலீஸாா், போராட்டத்தின் போது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அதில் ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என்றனா். இதையடுத்து மொய்னுதீனுக்கு ஏற்பட்ட காயங்கள் தொடா்பாக மேலும் ஆவணங்களை தாக்கல் செய்ய அவரது தரப்பு வழக்குரைஞா் கால அவகாசம் கோரினாா். இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT