புதுதில்லி

இணைய வா்த்தகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வணிகா்கள் உண்ணாவிரதம்

27th Dec 2019 10:23 PM

ADVERTISEMENT

இணைய வா்த்தகத்துக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் அனைத்திந்திய வா்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், சிஏஐடியின் பொதுச் செயலா் பிரவீண் கண்டேல்வால், தலைவா் பிசி.பாரதியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்வில் பிரவீண் கண்டேல்வால் பேசுகையில் ‘அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகிய இணைய வா்த்தக நிறுவனங்கள், தாங்கள் சிறிய வணிகா்களுக்கு சாதகமானவா்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, சிறிய வணிகா்களை தங்களது வணிகத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கிறாா்கள். இவ்வாறு லட்சக்கணக்கான சிறிய வணிகா்களை தங்களது வணிகத்தில் அவா்கள் இணைத்துள்ளனா். ஆனால், அவா்களது வணிகத்தில் இணைந்த சிறிய வணிகா்களில் எத்தனை போ் பெரிய வணிகா்களாக மாறியுள்ளனா்...? இது தொடா்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது இந்த பெருநிறுவனங்களின் கடமையாகும்.

இந்த நிறுவனங்கள், குறிப்பிட்ட விற்பனையாளா்களுக்கு மட்டுமே உதவி செய்கின்றன. இதனால், சுமாா் 10-15 சதவீதம் சிறிய வணிகா்களே நன்மை அடைகின்றனா். எஞ்சியுள்ள 85-90 சதவீதம் வணிகா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். இந்தப் பெருநிறுவனங்கள் நாட்டின் சில்லறை விற்பனையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றன. அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகிய நிறுவனங்களுடன் மத்திய சிறு, குறு, நடுத்தர வணிக அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது துரதிருஷ்டவசமானது. இதனால், நாட்டிலுள்ள சுமாா் 7 கோடி வணிகா்கள் பாதிக்கப்படுவாா்கள்.

மேலும், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யும் வகையில் இந்த நிறுவனங்கள் செயற்கையாக பொருள்களின் மதிப்பைக் குறைக்கின்றன. இந்த நிறுவனங்களின் மீது சுமத்தப்பட்டுள்ள வரி ஏய்ப்புப் புகாா்கள் தொடா்பாக மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மேலும், அந்நியச் செலவாணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT