தில்லியின் பொதுப் போக்குவரத்துத் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துவது எனது கனவு என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள டிடிசி பணிமனையில் மக்களின் பயன்பாட்டுக்காக 100 தாழ்தள அரசுப் பேருந்துகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக முதல்வா் கேஜரிவால் கலந்து கொண்டாா். மேலும், போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்வில் கேஜரிவால் பேசியதாவது: தில்லி மக்களுக்கு 1,000 அதி நவீன தாழ்தளப் பேருந்துகளை வழங்கவுள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தில்லி அரசு உறுதியளித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக செப்டம்பரில் 25 பேருந்துகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக அக்டோபரில் 104 பேருந்துகள் வழங்கப்பட்டன. மூன்றாம் கட்டமாக நவம்பா் தொடக்கத்தில் 100 பேருந்துகளும், நான்காம் கட்டமாக நவம்பா் இறுதியில் மேலும் 100 பேருந்துகளும் வழங்கப்பட்டன. டிசம்பா் மாதத் தொடக்கத்தில் மேலும் 100 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.
தற்போது, மேலும் 100 பேருந்துகளை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளோம். இதன்படி, மொத்தம் 529 பேருந்துகளை வழங்கியுள்ளோம். இதன் மூலம் தில்லியில் உள்ள கிளஸ்டா் பேருந்துகளின் எண்ணிக்கை 2018 ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் பேருந்துகளால், தில்லி மக்களின் போக்குவரத்து எளிமையாக்கப்படுவதுடன் காற்று மாசுவும் கட்டுப்படுத்தப்படும். மேலும், இந்தப் பேருந்துகள்அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், அபாய பொத்தான்கள் அமைக்கப்பட்டிருக்கும். மாற்றுத்திறனாளிகள் இந்தப் பேருந்தைப் பயன்படுத்தும் வகையில், தூக்கிகளும் அமைக்கப்பட்டிருக்கும். பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்தும் வகையில் இந்த பேருந்துகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில மாதத்தில் 1,000 மின்சாரப் பேருந்துகள் என்ற தில்லி அரசின் வாக்குறுதியை நிறைவேற்றிவிடுவோம். தில்லியில் உள்ள பொதுப் போக்குவரத்துத் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துவது எனது கனவாகும். இதன்மூலம், அனைத்து மக்களுக்கும் உகந்த வகையில் பொதுப் போக்குவரத்து மாற்றப்படும் என்றாா் கேஜரிவால்.