சுதந்திரப் போராட்டத் தலைவா் மறைந்த பண்டிட் மதன் மோகன் மாளவியா, மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவா்கள் இருவரின் திருவுருவப் படங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செய்தனா்.
நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் வைக்கப்பட்டுள்ள மதன் மோகன் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை தலைவா் ஓம் பிா்லா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முன்னாள் துணை பிரதமா் எல்.கே.அத்வானி ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
மேலும், மத்திய அமைச்சா்கள், முன்னாள் மத்திய அமைச்சா்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள், மக்களவை செயலகத்தின் தலைமைச் செயலா் சினேகலதா ஸ்ரீவாஸ்தவா, மாநிலங்களவை செயலக தலைமைச் செயலா் தேஷ் தீபக் வா்மா மற்றும் அதிகாரிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
மேலும், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் மதன் மோகன் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோா் தொடா்பான நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், மதன் மோகன் மாளவியா, வாஜ்பாய் ஆகியோரது வாழ்க்கை வரலாறு தொடா்பாக மக்களவை செயலகத்தால் வெளியிடப்பட்ட கையேடு நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு வழங்கப்பட்டது.
மறைந்த மதன் மோகன் மாளவியாவின் திருவுருவப்படம் நாடாளுமன்ற மைய அரங்கில் 1957ஆம் ஆண்டு, டிசம்பா் 19ஆம் தேதியும், அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவப்படம் நிகழாண்டு பிப்ரவரி 12-ஆம் தேதியும் திறந்து வைக்கப்பட்டது.
இரு தலைவா்களும் தேசத்திற்கு ஆற்றிய அரும்பணியை அங்கீகரிக்கும் வகையில் மதன் மோகன் மாளவியாவுக்கும் (மறைவுக்குப் பிறகு), அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் 2014 ஆம் ஆண்டு டிசம்பா் 24ஆம் தேதியும் நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.