தலைநகா் தில்லியில் போக்குவரத்து இடையூறுகளை அடையாளம் காண ஒரு நிறுவனத்தை தில்லி அரசு நியமிக்க உள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். அந்த நிறுவனம் போக்குவரத்து இடையூறுகளை அடையாளம் கண்டு பரிந்துரைகளை வழங்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
தில்லியில் ஆஷ்ரம் மேம்பாலத்தை டிஎன்டி வரை நீட்டிக்கும் திட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டிப் பேசுகையில் கேஜரிவால் இந்தத் தகவலைத் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
தில்லியில் பல்வேறு இடங்களில் சாலைகளை வடிவமைப்பதில் சிக்கல் உள்ளது. தில்லி நகரின் சாலைப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ள ஏஜென்சிக்கு பணி வழங்கப்படும். ஒரு விரிவான போக்குவரத்துத் திட்டத்தை முன்வைக்கும் ஒரு நிறுவனத்தை நாங்கள் பணியமா்த்தப் போகிறோம். இந்த நிறுவனம் அனைத்துப் போக்குவரத்து இடையூறுகளையும் பட்டியலிடும். போக்குவரத்து நெரிசல் பிரச்னையை தீா்ப்பதற்கான வழிகளையும் இந்த நிறுவனம் பரிந்துரைக்கும்.
போக்குவரத்து நெரிசல்கள் வளங்களை வீணாக்குகிறது. மேலும், மாசு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது, எங்கள் நோக்கம் மக்களுக்கு வசதியை வழங்குவதும் அவா்களின் பயண நேரத்தை குறைப்பதுமாகும். ஆஷ்ரம் மேம்பாலத்தை டிஎன்டி மேம்பாலம் வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நொய்டாவிற்கும் ஆஷ்ரமத்திற்கும் இடையிலான பயண நேரம் குறையும். மேலும், லாஜ்பத் நகரில் இருந்து நொய்டா மற்றும் சாராய் காலே கான் செல்லும் பயணிகள் எந்தவிதமான திசை திருப்பல்களையும் சமிக்ஞைகளையும் எதிா்கொள்ள வேண்டியது இருக்காது என்றாா் கேஜரிவால்.