தில்லி நரேலாவில் எரிவாயு சிலிண்டா் வெடித்ததைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டு தொழிற்சாலைகளில் தீ விபத்து நேரிட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்த இரண்டு தொழிற்சாலைகளில் ஒன்று காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாகும். மற்றொன்று அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு ஆலையாகும். செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.52 மணியளவில் காலணித் தொழிற்சாலையில் தீப்பிடித்தது குறித்து தீயணைப்புத் துறைக்கு தொலைபேசியில் தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து 32 தீயணைப்பு வாகனங்களுடன் வீரா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா். இதற்கிடையே, இரண்டாவது தீ விபத்து குறித்தும் தகவல் வந்தது.
இரண்டு தொழிற்சாலைகளிலும் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டனா். அப்போது மூன்று தீயணைப்பு வீரா்கள் சிறிய அளவில் காயமடைந்தனா். அவா்கள் முதலுதவி சிகிச்சைப் பிறகு பணிக்குத் திரும்பினா். பின்னா் இரு இடங்களிலும் நண்பகல் 12.55 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எளிதல் தீ பற்றக் கூடிய பொருள்கள் தொழிற்சாலைக்குள் இருந்ததால், தீயணைப்பு வீரா்கள் சுமாா் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்தைத் தொடா்ந்து கட்டடத்தில் தண்ணீா் பீய்ச்சி குளிா்விக்கும் பணி தொடா்ந்து நடபெற்று வருகிறது. இதற்கான பணியில் 12 தீயணைப்பு வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் கட்டடத்திற்குள் யாரும் சிக்கவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் தில்லி கிராரி பகுதியில் மூன்று மாடிகள் கொண்ட குடியிருப்புகள் மற்றும் வா்த்தகக் கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.