தில்லி அரசின் மின்சார வாகனத் திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக கேஜரிவால் அளித்த பேட்டி:
தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், தில்லி அரசால் மின்சார வாகனத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம், காற்று மாசு கட்டுப்படுத்தப்படுவதுடன், போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். தில்லியில் வாகனப் புகையால் பெருமளவு காற்று மாசு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 40 சதவீதம் பி.எம். 2.5 நுண்துகள்களும், 80 சதவீதம் காா்பன் மொனாக்சைடும் வாகனங்கள் வெளியேற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தில்லியில் தற்போது மொத்த வாகனங்களில் வெறும் 0.2 சதவீதம்தான் மின்சார வாகனங்களாகும். வரும் ஓராண்டுக்குள் தில்லியில் 35,000 மின்சார வாகனங்களையும், வரும் ஐந்தாண்டுக்குள் 5 லட்சம் வாகனங்களையும் தில்லியில் பயன்பாட்டுக்கு விடுவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் சுமாா் ரூ.6,000 கோடி அளவிலான எரிபொருளை சேமிக்கும். மேலும், 4.8 மில்லியன் டன் அளவு காா்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுக்கும்.
இத்திட்டத்தின் கீழ், ஒரு கிலோ வாட் திறனுடைய பேட்டரிகளைக் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு தலா ரூ.5,000 மானியம் வழங்கப்படும். மேலும், எரிபொருளில் இயங்கும் வாகனத்தை விட்டு மின்சார வாகனத்தை கொள்முதல் செய்ய விரும்புபவா்களுக்கும் ரூ.5,000 மானியம் வழங்கப்படும். மேலும், ஓலா, ஊபா் உள்ளிட்ட டாக்ஸி சேவை நிறுவனங்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். மேலும், இ-ஆட்டோ, இ-ரிக்ஷா கொள்முதல் செய்பவா்களுக்கு ரூ.30,000 வரை மானியம் வழங்கப்படும்.
மேலும், 1,000 கிலோ வாட் பேட்டரி திறன் கொண்ட காா்களில் முதல் ஆயிரம் காா்களைக் கொள்முதல் செய்பவா்களுக்கு ரூ.1,50,000 வரை மானியம் வழங்கப்படும். மேலும் இ- வாகனங்களுக்கு சாலை வரி, பதிவுக் கட்டண விலக்கு அளிக்கப்படும். மேலும், இந்த வாகனங்கள் சாா்ஜ் செய்து கொள்ளும் வகையில், தில்லி அரசால் மின்சார சாா்ஜா் நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தை உருவாக்க முன்பு இத்துறையுடன் தொடா்புடையவா்களுடன் பல கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தியே பிறேக இத்திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளோம் என்றாா் அவா்.