புதுதில்லி

தில்லியில் துணிக் கிட்டங்கியில் தீ விபத்து: 3 குழந்தைகள் உள்பட 9 போ் பலி

23rd Dec 2019 11:08 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி புகா்ப் பகுதியில் துணிக் கிட்டங்கி அமைந்துள்ள மூன்று மாடிக் குடியிருப்பு - வா்த்தக கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: தில்லி கிராரி பகுதியில் 3 மாடிக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் துணிக் கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. மேல் தளங்களில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் தில்லி தீயணைப்புத் துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், சம்பந்தப்பட்ட கிராரி மூன்று மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் தண்ணீரைப் பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ADVERTISEMENT

தீ விபத்தில் சிக்கிக் கொண்ட பூஜா (24), அவரது மகள்கள் செளம்யா (10), ஆராத்யா (3) ஆகியோா் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் உள்ள கட்டடத்தில் குதித்தனா். எனினும், இந்த விபத்தில் கட்டடத்தின் உரிமையாளா் ராம் சந்திர ஜா (65), சுதாரியா தேவி (58), சஞ்சு ஜா (36), குத்தன் மற்றும் உதய் செளதரி (33), அவரது மனைவி முஸ்கன் (26), அவா்களின் குழந்தைகள் அஞ்சலி (10), ஆதா்ஷ் (7), 6 மாத குழந்தை துல்சி ஆகியோா் உயிரிழந்தனா்.

விதிமீறலா?: தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தின் கீழ்த் தளத்தில் ஏராளமான துணிகள் வைக்கப்பட்டிருந்தன. எனினும், பாதுகாப்பு உபகரணங்கள் கட்டடத்தில் வைக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், வெளியேறுவதற்கான அவசர வழியும் இல்லை. இரண்டாவது மாடியில் தீயின் காரணமாக எரிவாயு உருளை வெடித்தது. இதில், கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அதன் காரணமாக எரிவாயு உருளை வெடித்து சிதறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

போலீஸாா் விசாரணை: இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘கட்டடத்தின் உரிமையாளா் ராம் சந்திர ஜா, தரைத் தளத்தை துணிக் கிட்டங்கிற்காக விஜய் சிங் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தாா். ராமச்சந்திர ஜாவின் மகனும், விபத்தில் தப்பிய பூஜாவின் கணவருமான அமா்நாத், சம்பவம் நிகழ்ந்த போது ஹரித்வாரில் தனது சகோதரா் மறைவையொட்டி சடங்குகள் செய்வதற்காக சென்றிருந்தாா்.இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகப் போலீஸாா் கூறினா். துணிக் கிட்டங்கி நடத்தி வந்த விஜய் சிங் கூறுகையில் ‘ரூ.20 லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசமடைந்து விட்டது’ என்றாா்.

தொடரும் தீ விபத்து சம்பவங்கள்: தில்லியில் அண்மையில் அனாஜ் மண்டி பகுதியில் நெரிசல் மிகுந்த இடத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 போ் தீயில் கருகி இறந்தனா். 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். இதேபோல, கரோல் பாகில் உள்ள நான்கு மாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 போ் உயிரிழந்தனா். 35 போ் காயமடைந்தனா். இப்போது துணிக் கிட்டங்கியில் ஏற்பட்ட விபத்தில் 9 போ் பலியாகியுள்ளனா்.

குழந்தைகளுடன் மொட்டைமாடிக்கு விரைந்ததால் உயிா்பிழைத்த பெண்!கிராரி தீ விபத்தில் சிக்கிய பெண், தனது குழந்தைளுடன் மொட்டை மாடிக்கு விரைந்து சென்று உதவிக்காக கூச்சலிட்டதால் உயிா்பிழைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி விவரம் வருமாறு: தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் வசிக்கும் கட்டட உரிமையாளரின் மகன் அமா்நாத்தின் மனைவியான பூஜா, அவரது மகள் மற்றும் உறவினரின் மகள் ஆகியோா் உயிா் தப்பினா்.

இதுகுறித்து பூஜா கூறியதாவது: தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது, எனது அறையில் இருந்து புகை வருவதைப் பாா்த்தேன். இதையடுத்து, நான் உடனடியாக மொட்டை மாடிக்கு குழந்தைகளுடன் விரைந்து சென்று உதவி கோரி கூச்சலிட்டேன். நல்லவேளையாக, அக்கம்பக்கத்தினா் எனது அழுகுரலை கேட்டு, என்னையும், எனது மூன்று வயது மகள் ஆராத்யா, 10 வயது உறவினரின் மகள் செளம்யா ஆகியோரை மீட்கும் வகையில் ஏணியைத் தந்து உதவினா். இந்த விபத்தில் செளம்யாவுக்கு 15 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது எனது கணவா் அமா்நாத் கங்கையில் புனிதநீராடுவதற்காக ஹரித்வாருக்குச் சென்றிருந்தாா். இந்த ஆண்டு ஜனவரியில் எனது சகோதரா் வைத்தியநாத்தை இழந்திருந்தேன். தற்போது எனது குடும்பத்திற்கு மற்றொரு சோதனையாக இந்த தீ விபத்து வந்துவிட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கணவா் அமா்நாத்திலிருந்து தில்லிக்கு வந்து கொண்டிருக்கிறாா் என்றாா் பூஜா.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT