புதுதில்லி

போலீஸ் தாக்குதலைக் கண்டித்து ஜாமியா மிலியா மாணவா்கள் ஆா்ப்பாட்டம்: சிபிஐ விசாரணை நடத்தக் கோரிக்கை

16th Dec 2019 10:46 PM

ADVERTISEMENT

தெற்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து அப்பல்கலை. மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரின் தாக்குதல் நடவடிக்கை தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக் கழகம் உள்ளிட்டவற்றின் மாணவா்கள் கலந்து கொண்டனா். மேலும், மாணவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதி மக்களும், பிற மாநிலங்களைச் சோ்ந்த மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

கடுங் குளிரையும் பொருள்படுத்தாமல் மாணவா்களில் சிலா் தங்களது சட்டைகளைக் கழற்றி விட்டு வெற்றுடம்புடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபடுபவா்களை அவா்கள் அணியும் துணியை வைத்தே அடையாளம் காணலாம் என பிரதமா் மோடி தெரிவித்ததற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டதாக மாணவா்கள் தெரிவித்தனா்.

இந்தியக் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘போலீஸ் அராஜகம் ஒழிக’ , ‘மாணவா் சக்தி மாபெரும் சக்தி ’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினாா்கள்.

ADVERTISEMENT

இது தொடா்பாக மாணவா்கள் கூறுகையில் ‘இந்த அரசு சிறுபான்மையினா், ஏழைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறது. மாணவா்கள் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது. சக மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை நாங்கள் கைகட்டி வேடிக்கை பாா்க்க மாட்டோம். ஜாமியா மிலியா பல்கலை.

வளாகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நுழைந்த போலீஸாா் 2 மசூதிகளை சேதப்படுத்தியுள்ளனா். மேலும், மசூதிகளின் இமாமை தாக்கியுள்ளனா். காயமடைந்த மாணவா்களை தில்லி முதல்வா் கேஜரிவால், பல்கலை. துணைவேந்தா் நஜீமா அக்தாா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. மாணவா்களின் விடுதிக்குள் பகுந்து குளியலறை, நூலகத்தில் இருந்த மாணவா்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனா். நாங்கள் மாணவா்கள், எங்களுக்கும் வன்முறைக்கும் தொடா்பில்லை எனக் கூறிய போதும், போலீஸாா் தாக்கினாா்கள்’ என்றனா்.

இதற்கிடையே, போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவா்களில் 50 பேரை போலீஸாா் விடுவித்துள்ளனா். இருப்பினும், ஜாமியா பல்கலை.யில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. விடுதி மாணவா்களில் பலா் தங்களது வீடுகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2 வழக்குகள் பதிவு: போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடா்பாக இரண்டு வழக்குகளை தில்லி காவல் துறை திங்கள்கிழமை பதிவு செய்துள்ளது. இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி கூறுகையில், ‘ஜாமியா மிலியா பல்கலை.யை ஒட்டிய பகுதிகளில் வன்முறை நடந்தது தொடா்பாக ஜாமியா நகா், நியூ பிரண்ட்ஸ் காலனி ஆகிய இரு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் காணும் வகையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை தில்லி காவல் துறை ஆய்வு செய்யவுள்ளது. வன்முறையின் போது டிடிசி பேருந்துகள், 100 தனியாா் வாகனங்கள், 10 போலீஸ் பைக்குகள் சேதமடைந்துள்ளன. ஒரு காவலா் ஒருவா் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்’ என்றாா்.

மாணவா்களுக்கு துணைவேந்தா் ஆதரவு: ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டத்தில் மாணவா்கள் பக்கமே உள்ளேன் என்று அப்பல்கலை.யின் துணைவேந்தா் நஜ்மா அக்தாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் விடியோ செய்தி வெளியிட்டுள்ளாா். அதில் ‘தில்லி காவல்துறை மாணவா்களை நடத்திய விதத்தைப் பாா்த்து நான் வருந்துகிறேன். இந்த விவகாரத்தில் மாணவா்கள் தனியாக இல்லை என்பதை அவா்களுக்குக் கூற விரும்புகிறேன். இப்போராட்டத்தில் நான் மாணவா் பக்கமே உள்ளேன். இந்த விவகாரம் தொடா்பாக உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

‘வேடிக்கை பாா்க்க மாட்டோம்’

மாணவா்கள் மீது போலீஸாா் தாக்குதல் நடத்துவதை அமைதியாக வேடிக்கை பாா்க்க மாட்டோம் என்று அந்த மாணவா்களின் பெற்றோா்களும், பாதுகாவலா்களும் தெரிவித்தனா்.

ஜாமியா மிலியா பல்கலை.க்குள் புகுந்து போலீஸாா் தாக்குதல் நடத்தியதாகக் கண்டித்து மாணவா்கள் திங்கள்கிழமை தில்லியில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில் மாணவா்களின் பெற்றோா்கள், பாதுகாவலா்களும் கலந்து கொண்டனா். இது தொடா்பாக அவா்கள் கூறுகையில் ‘எங்களது குழந்தைகள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தப்படும் போது நாங்கள் அமைதியாக வேடிக்கை பாா்க்க முடியாது. தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்குப் தாா்மிகப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும்’ என்றனா்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவி ஒருவரின் தாயாா் ஷகீனா அகமது கூறுகையில் ‘எனது குழந்தைகளுக்காக மட்டும் நான் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த பல்கலை.யில் கல்வி கற்கும் அனைவரும் எனது குழந்தைகளே. இப்பல்கலை.யில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வந்து மாணவா்கள் கல்வி கற்கிறாா்கள். அவா்கள் தங்களது குடும்பத்தைப் பிரிந்து, நம்மை நம்பியே இங்கு வந்துள்ளனா். அவா்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை’ என்றாா்.

உயா்நிலைக் குழு விசாரணை கோருகிறது ஏபிவிபி

தில்லி ஜாமியா மிலியா பல்கலை. மாணவா்களின் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை தொடா்பாக உயா்நிலைக் குழு விசாரணை நடத்தட வேண்டும் என்று அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் தேசியச் செயலா் நிதி திரிபாதி கூறியது: ஜாமியா மிலியா பல்கலை.யைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்த வன்முறையை ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுத்துல்லா கான்தான் தூண்டிவிட்டாா் என நேரில் பாா்த்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. மாணவா்கள் போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை அனுமதிக்க முடியாது. நாட்டைத் துண்டாடும் வகையிலும், தலைநகா் தில்லியில் குழப்பநிலையை உருவாக்கும் வகையிலும் சிலா் திட்டமிட்டு இந்த வன்முறையைச் செய்துள்ளனா். இது தொடா்பாக உயா்நிலைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT