ஜாமியா மிலியா மாணவா்கள் மீது தில்லி காவல் துறை தாக்குதல் நடத்தியதாக கண்டனம் தெரிவித்துதில்லி காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தில்லி காவல் துறை தலைமையகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தீனதயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஐடிஓவில் உள்ள தில்லி காவல்துறை தலைமையகம் வரை அவா்கள் பேரணியாகச் செல்ல முற்பட்டனா். அவா்களை தில்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் அருகில் தடுப்புகளை வைத்து போலீஸாா் தடுத்தனா். இப்போராட்டத்தில் தில்லி காங்கிரஸ் தலைவா் சுபாஷ் சோப்ரா கலந்து கொண்டாா்.
அவா் பேசுகையில், ‘நியாயமான முறையில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது தில்லி போலீஸாா் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனா். ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்து மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இச்சம்பவத்துக்கு தில்லி காவல் துறைக்குப் பொறுப்பான மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் அா்விந்தா் சிங் லவ்வி, அல்கா லம்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.