புதுதில்லி

பருத்தி மாஞ்சா மீதான தடைக்கு எதிரான மனு: தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

16th Dec 2019 10:52 PM

ADVERTISEMENT

பட்டம் விடுவதற்குப் பயன்படுத்தப்படும் மாஞ்சா எனப்படும் பாரம்பரிய பருத்தி நூல் தயாரிப்பு, கொள்முதல், இருப்பு வைப்பது, விற்பது ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது பதில் அளிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவைத் தொடா்ந்து பட்டம் விடுவதற்குப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதித்து தில்லி அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு எதிராக தில்லி உயா் நீதிமன்றத்தில், மாஞ்சா உள்ளிட்ட பொருள்களின் விற்பனையில் ஈடுபட்டுள்ள கடைக்காரா்கள் சாா்பிலான சங்கம் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வெளியிடப்பட்ட இந்தத் தடைக்கான அறிவிக்கை, அந்த உத்தரவுக்கு முரண்பாடாக உள்ளது. தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் சிந்தடிக் அல்லது நைலான் நூலின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், இருப்புக்கு தடை விதித்திருந்தது. ஆனால், கண்ணாடி துகள்கள், உலோகங்கள், பசை அல்லது இதரப் பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பாரம்பரிய பருத்தி வகைக்கு தடை விதிக்கப்படவில்லை. தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் 2017-இல் பிறப்பித்த இது தொடா்பான உத்தரவில், பாரம்பரிய பருத்தி மாஞ்சாவுக்குத் தடை விதிக்கப்படவில்லை.

மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா அமைப்பின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அதற்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னதாக, விலங்குகளுக்கு தீமை ஏற்படுத்தி வருவதால், மாஞ்சா பயன்பாடுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவை தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் விசாரித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

ADVERTISEMENT

ஆகவே, 2017, ஜனவரியில் தில்லி அரசு பிறப்பித்த அறிவிக்கையில் பாரம்பரிய பருத்தி மாஞ்சாவுக்கு தடை விதித்திருந்தது. அதை மாற்றி அமைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், பாரம்பரிய பருத்தி மாஞ்சா நூல்களை இருப்பு வைப்பதற்கும், கொள்முதல், விற்பனை செய்வதற்கும், தயாரிப்பதற்கும் தில்லி அரசு எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி சி.ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் தில்லி அரசின் நிலைப்பாடு குறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT