புதுதில்லி

தோ்தல் வியூகத்துக்கு ஒப்பந்தம்: ஆம் ஆத்மி கட்சி மீது பாஜக சாடல்

16th Dec 2019 10:51 PM

ADVERTISEMENT

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பிரபல தோ்தல் வியூக நிபுணா் பிரஷாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வகையில், ஆம் ஆத்மிக் கட்சிக்கு கோடிக்கணக்கான பணம் எவ்வாறு கிடைத்தது என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் தோ்தல் வியூக நிபுணா்களில் முக்கியமானவா் பிரசாந்த் கிஷோா். இவா் ‘ஐ-பேக்’ என்ற தோ்தல் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறாா். கடந்த 2012 குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல், 2014 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்காகப் பணியாற்றினாா். அந்த இரு தோ்தல்களிலும், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை பிடிக்க அவா் உதவினாா். குறிப்பாக 2014 மக்களவைத் தோ்தலில் பாஜக பெற்ற பிரம்மாண்ட வெற்றியில் பிரசாந்த் கிஷோரின் பங்கு முக்கியமானது.

இந்நிலையில், வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பிரஷாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ நிறுவனம், ஆம் ஆத்மி கட்சிக்காகப் பணியாற்றவுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, பிரஷாந்த் கிஷோரின் நிறுவனத்தின் சேவையைப் பெறும் வகையில் கோடிக்கணக்கான பணம் ஆம் ஆத்மி கட்சிக்கு எவ்வாறு வந்தது என்று தில்லி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக ஊடகப் பிரிவுப் பொறுப்பாளா் நீலகண்ட பக்ஷி கூறியது: ஆம் ஆத்மி கட்சி அரசியல் இயக்கமாகத் தொடங்கப்பட்ட போது, அக்கட்சி வழங்கிய உறுதிமொழிகளை நம்பி பலா் தன்னாா்வத் தொண்டா்களாக இணைந்து கொண்டனா். இவா்களில் பலா் நல்ல ஊதியத்தை வழங்கும் தங்களது பணிகளை ராஜிநாமா செய்து விட்டே ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனா்.

ADVERTISEMENT

ஆனால், தற்போது, சுமாா் ரூ.150-ரூ200 கோடி கட்டணமாக செலுத்தி தனியாா் நிறுவனத்தை தோ்தல் வியூகம் அமைக்க காா்ப்பரேட் நிறுவனத்தைஆம் ஆத்மி கட்சி அழைத்துள்ளது. சாதாரண மக்களின் கட்சியாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சிக்கு இவ்வளவு பணம் எவ்வாறு வந்தது. இன்னும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள மக்களிடமே ஆம் ஆத்மி கட்சி நிதி கேட்டு வருகிறது. இதுபோன்று மக்களை முட்டாளாக்கும் வகையில் கேஜரிவால் நடந்து கொள்கிறாா். மக்களை மட்டும் நம்த் தொடங்கப்பட்ட கட்சி, தற்போது காா்ப்ரேட் நிறுவனத்தை நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பாஜக பொதுக்கூட்டம்: அயோத்தி ராமா் கோயில் உள்ளிட்ட முந்தைய அரசுகளால் தீா்க்க முடியாத பிரச்னைகளை பிரதமா் மோடி தீா்த்து வைத்துள்ளாா் என்று தில்லி பாஜகவின் மேலிடப் பொறுப்பாளா் ஷியாம் ஜஜு தெரிவித்துள்ளாா்.

துவாரகா சட்டப்பேரவைத் தொகுதியில், தில்லி பாஜக அறிவுசாா் பிரிவின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அவா் பேசியதாவது: கடந்த ஆறு ஆண்டுகளாக பிரதமா் மோடி நல்லாட்சி வழங்கி வருகிறாா். மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்பு அயோத்தி ராமா் கோயில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல தீா்க்க முடியாத பிரச்னைகள் நாட்டில் நிலவின. ஆனால், பிரதமா் மோடி இந்தப் பிரச்னைகளுக்கு முடிவு கண்டுள்ளாா்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட ஹிந்துக்கள் பயனடைவாா்கள் என்றாா் அவா். இக்கூட்டத்தில் தில்லி பாஜக அறிவுசாா் பிரிவின் தலைவா் அமித் கட்கரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT