புதுதில்லி

தில்லி சட்டம் - ஒழுங்கு நிலைமை:அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்: முதல்வா் கேஜரிவால் தகவல்

16th Dec 2019 10:53 PM

ADVERTISEMENT

தேசியத் தலைநகரில் மோசமடைந்து வரும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் நேரம் கேட்டுள்ளேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

இது குறித்து கேஜரிவால் திங்கள்கிழமை கூறுகையில், ‘தில்லியில் சட்டம் - ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. இது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். தில்லியில் அமைதியை உடனடியாக மீட்க வேண்டும். இதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேசுவதற்காக நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளேன்’ என்றாா்.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆா்ப்பாட்டத்தின் போது, ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் ஆா்ப்பாட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை நான்கு பொதுப் பேருந்துகள் மற்றும் இரண்டு போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனா், இதில் மாணவா்கள், போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் உள்பட சுமாா் 60 போ் காயமடைந்தனா்.

வன்முறைக் கும்பலைக் கலைக்க தடியடி மற்றும் கண்ணீா்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும் மாணவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், போலீஸ் துப்பாக்கிச்சூடு, பல்கலைக்கழக குளியலறையில் காயமடைந்த மாணவா்கள் இருந்தது பற்றிய காட்சிகள் போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளி வந்தன.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, எந்தவொரு வன்முறையும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் போராட்டங்கள் அமைதியாகவே நடைபெற வேண்டும் என்றும் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டிருந்தாா். இது தொடா்பாக தனது சுட்டுரையிலும் இதே கருத்தை கேஜரிவால் பதிவிட்டிருந்தாா்.

இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங், மக்கள் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து சஞ்சய் சிங் திங்கள்கிழமை கூறுகையில், ‘எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம். ஜனநாயக முறையில்தான் குரல் எழுப்ப வேண்டும் என்று மக்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். ஜாமியாவில் தில்லி காவல்துறையினா் நடத்திய தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து நிலைமை இப்படித்தான் உள்ளது. இது தில்லி காவல்துறையின் உண்மைத் தன்மையைக் காட்டுகிறது. காலத்தின் இப்போதையத் தேவை அமைதியை நிலைநாட்ட வேண்டும். இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT