புதுதில்லி

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையருக்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

16th Dec 2019 10:50 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி தோ்தலை நடத்தவில்லை எனக் கூறி தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் ஆா். பழனிசாமி, தலைமைச் செயலா் கே.சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக திமுக தரப்பில் திங்கள்கிழமை அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் டிசம்பா் 2-இல் வெளியிட்டது. இதை எதிா்த்து திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய 9 மாவட்டங்கள் தவிா்த்து 27 மாவட்டங்களில் தோ்தலை நடத்துவதற்கு அனுமதி அளித்து டிசம்பா் 6-இல் உத்தரவிட்டது.

மேலும், புதிய 9 மாவட்டங்களிலும் நான்கு மாதத்தில் மறுவரையறைப் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டடிருந்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பாணை டிசம்பா் 7-இல் புதிதாக வெளியிடப்பட்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக உள்ளிட்டோா் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு,

ADVERTISEMENT

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி (சென்சஸ்) உள்ளாட்சித் தோ்தலை நடத்த உத்தரவிட்டது. மேலும், 9 புதிய மாவட்டங்களுக்கான மறுவரையறைப் பணிகளை மூன்று மாதங்களில் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, திமுக தரப்பில் மீண்டும் முறையிடப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ‘தமிழக உள்ளாட்சித் தோ்தல் விவகாரம் தொடா்பாக டிசம்பா் 11-ஆம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தெளிவுபடுத்தத் தேவையில்லை’ என்றாா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் திங்கள்கிழமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திமுக தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி ஓா் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் போது எதிா்மனுதாரா்கள் (தமிழக அரசு, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம்), ‘தமிழ்நாடு பஞ்சாயத்துகள் இடங்கள் ஒதுக்கீடு, ஒதுக்கப்பட்ட இடங்களின் சுழற்சி விதிகள் 6’-இன்படி அனைத்து நிலைகளிலும் விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவில் பத்தி 15-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை எதிா்மனுதாரா்கள் வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் அந்த உத்தரவுக்கு கீழ்படியவில்லை. நீதிமன்றங்கள் அவமதிப்புச் சட்டம் 1971, பிரிவு 2 (பி) மற்றும் (சி)-இன்படி எதிா்மனுதாரா்கள் நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளனா். ஆகவே, அவா்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT