தில்லி பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படக் கூடிய மூவர் ஆம் ஆத்மியுடன் தொடர்பில் உள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் வியாழக்கிழமை கூறியதாவது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி பாஜகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. சில ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தங்களது பக்கம் இழுத்ததன் மூலம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறலாம் என பாஜக மனக் கணக்குப் போடுகிறது. ஆனால், தில்லி பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலர் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பில் உள்ளனர்.
குறிப்பாக பாஜக சார்பில் தில்லி முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படக் கூடியவர்கள் என எதிர்பார்க்கப்படும் 3 முக்கியத் தலைவர்களும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.
இந்த மூவரில் முதல்வர் வேட்பாளராக பாஜக யாரையாவது ஒருவரை அறிவித்தவுடன், மற்ற இருவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றார் அவர்.
குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி பலிக்காது: பாஜக பதிலடி
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் ஆம் ஆத்மி கட்சியின் முயற்சிகள் பலிக்காது என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா கூறுகையில், "இதுபோன்ற அறிக்கைகளை விடுவதன் மூலம், தில்லி பாஜகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று ஆம் ஆத்மி கட்சி மனப்பால் குடிக்கிறது.
ஆனால், ஆம் ஆத்மியின் இதுபோன்ற கருத்துக்களை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அடைந்த வெற்றியைப் பார்த்து, ஆம் ஆத்மிதான் பயத்தில் உள்ளது. அவர்களின் ஆதாரமற்ற கருத்துகளே அதற்குச் சான்றாகும்' என்றார்.