பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள் வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்யப்படுவதாக தில்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கமிட்டியின் தலைவரும் எம்எல்ஏவுமான மன்ஜீந்தர் சிங் சிர்சா கூறியதாவது:
பாகிஸ்தானில் சிறுபான்மை இந்து, சீக்கிய சமூகத்தினருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சிறுபான்மை மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள், அங்கே கொல்லப்படுகின்றனர். இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். மேலும், இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கடத்தப்பட்டு ஆயுத முனையில் முஸ்லிம்களாக மாற்றப்படுகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் இதுபோன்று சுமார் 1,500 சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த புதன்கிழமை கூட சீக்கிய மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு முஸ்லிமாக மாற்றப்பட்டுள்ளார். இந்த மதமாற்றச் சம்பவங்கள் தொடர்பாக பாகிஸ்தானுக்கு சர்வதேச அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும். இந்திய வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.