நாட்டில் பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி இந்த ஆண்டில் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மூன்றாவது மேம்பட்ட மதிப்பீட்டு (2018-19) அறிக்கையை அத்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர ஆதார முகமைகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், இந்த மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி 313.85 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017-18-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 0.69 சதவீதம் அதிகமாகும்.
2017-18-இல் 25.43 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி நடைபெற்றது. இதில் 311. 71 மில்லியன் டன் உற்பத்தி கிடைத்தது. 2018-19-இல் மூன்றாவது மேம்பட்ட மதிப்பீட்டின்படி, சாகுபடிப் பரப்பளவு 25. 49 மில்லியன் ஹெக்டேராக இருக்கும் என்றும், உற்பத்தி 313. 85 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் பழங்கள், காய்கறிகள், நறுமணப் பொருள்கள், மலர்கள், தேன் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிப்பு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தோட்டப்பயிர்கள், வாசனை, மூலிகைப் பயிர்கள் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்திருப்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், பழங்கள் உற்பத்தி 97.36 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2018- 19-இல் 98.57 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, காய்கறி உற்பத்தி 185.88 மில்லியன் டன், வெங்காய உற்பத்தி 23.45 மில்லியன் டன், உருளைக்கிழங்கு உற்பத்தி 53.03 மில்லியன் டன், தக்காளி உற்பத்தி 19.39 மில்லியன் டன், நறுமணப் பொருள்கள் உற்பத்தி 9.22 மில்லியன் டன் என்ற வீதத்தில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு காய்கறி உற்பத்தி 0.81 சதவீதம், வெங்காய உற்பத்தி 0.95 சதவீதம், உருளைக்கிழங்கு உற்பத்தி 3.4 சதவீதம் என்ற வீதத்தில் அதிகரிக்கும் என்றும், தக்காளி உற்பத்தி 1.8 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் அந்த மதிப்பீட்டின் மூலம் தெரிய வந்துள்ளது.