விளையாட்டு வீரர் தயான் சந்தின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தேசிய விளையாட்டு தினம் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அந்தந்த டிடிஇஏ பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் உரை இடம்பெற்றது. தொடர்ந்து ஓட்டப்பந்தயம், கபடி, கோ- கோ, வாலிபால், தொடர் ஒட்டம், பூப்பந்து, தவளை ஓட்டம் போன்ற விளையாட்டுப் போட்டிகளும், யோகாவும் இடம் பெற்றன. ராமகிருஷ்ணபுரம் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் டிடிஇஏ செயலர் ராஜு கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்துப் பள்ளி மாணவர்களையும் பாராட்டினார்.