புதுதில்லி

நீரவ் மோடி, சகோதரரின் சொத்துகளை முடக்க அனுமதி கோரி சிபிஐ மனு

29th Aug 2019 07:31 AM

ADVERTISEMENT

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் ஆகியோரின் சொத்துகளின் முடக்குவதற்கு சிபிஐ, நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.
நாட்டிலேயே மிகப் பெரிய வங்கி கடன் மோசடியாக கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி கடந்த ஆண்டு பிப்ரவரியில் அம்பலமானது. பல நாடுகளில் வைர உற்பத்தி நிறுவனங்கள், வைர விற்பனைக் கடைகளை நடத்தி வந்த நீரவ் மோடி, அவரது உறவினரும் கீதாஞ்சலி குழுமத் தலைவருமான மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதக் கடிதங்களைப் பெற்று, அவற்றை வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிக் கிளைகளிடம் கொடுத்து சுமார் ரூ.13,400 கோடி வரை கடன் பெற்றனர். 
இந்த உத்தரவாதக் கடிதங்களை வழங்கியதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள பதிவேடுகளில் எந்த அலுவலகக் குறிப்பும் இல்லை. மேலும், அங்குள்ள கணினி சேமிப்பு மையத்திலும் அந்த விவரங்கள் இடம் பெறவில்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
எனினும், இந்த மோசடி அம்பலமாவதற்கு முன்னரே நீரவ் மோடி, சோக்ஸி உள்ளிட்டோர் இந்தியாவிலிருந்து தப்பிவிட்டனர். 
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் ஆகியோரின் சொத்துகளை முடக்குவதற்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ புதன்கிழமை அனுமதி கோரியது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.சி.பார்தே முன்னிலையில் சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது:
இவ்வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்பே குற்றம்சாட்டப்பட்ட நீரவ் மோடி நாட்டை விட்டு வெளியேறி விட்டார். எனவே அவருக்கு எதிரான வாரண்டுகளை செயல்படுத்த முடியவில்லை. அதன் பின் நீரவ் மோடி, பிரிட்டனில் கைது செய்யப்பட்டு, அவரை நாடுகடத்தி இந்தியா கொண்டு வருவதற்கான கோரிக்கை நிலுவையில் உல்ளது. 
எனினும், அவரது சகோதரரும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபருமான நிஷால்,  சுபாஷ் பரப் ஆகியோர் எங்கு இருக்கின்றனர் என்ற தகவல் தெரியவில்லை. நீரவ் மோடியின் நிறுவனத்தில் பரப் அதிகாரியாகப் பணியாற்றினார். 
நீரவ் மோடி, நிஷால் ஆகியோரின் சொத்துகளை முடக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT