மாணவர்கள் பட்டம் பறக்க விடுவதை ஊக்கப்படுத்தக் கூடாது என்று பள்ளி முதல்வர்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பட்டம் பறக்க விடுவதால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி பள்ளிக் கல்வி இயக்ககம் பள்ளி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லியில் பட்டம் பறக்க விடுவது ஒரு பொது அம்சமாகும். இது சில நேரங்களில் விபத்துகளுக்கு வழி ஏற்படுத்துகிறது. மேலும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்குத் தீமையை ஏற்படுத்துவதாகும். பட்டத்தில் மெட்டல் கலந்த கயிறு பயன்படுத்தப்படுவதே இதற்குக் காரணம். பட்டம் பறக்க விடுவது தொடர்புடைய விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. குறிப்பாக, திருவிழாக்களின் போது பட்டம் பறக்க விடுவதால் காயங்கள் ஏற்படுவதாகப் புகார்கள் பதிவாகின்றன.
இதன் தீவிரத்தை உணர்ந்து, பட்டம் பறக்க விடுவது மீதான ஆர்வத்தை ஊக்கம் இழக்கச் செய்யும் வகையில், இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், பட்டம் பறக்க விடும் போது, உயர் அழுத்த மின் கம்பிகள், மெட்ரோ மேல்நிலை மின்சார வழித் தடங்கள் ஆகியவற்றை பட்டம் தொடும் போது மின் விநியோகத்தைக் கூட பாதிக்கச் செய்யும். இது பட்டம் விடும் நபருக்கும் உயிர் இழப்பை ஏற்படுத்த முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், "பள்ளி காலை வேலையில் கூடும் போது பட்டம் பறக்க விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.