இணைய வர்த்தக நிறுவனங்களுக்கான வழிமுறைகள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இணைக்கப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்தான அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கூட்டம் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இணைய வர்த்தக நிறுவனங்களுக்கான வழிமுறைகளை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் ஏற்றுக்கொள்கிறது. இதற்கான சட்டவடிவை வரும் டிசம்பருக்குள் தயாரிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதற்கான கருத்துகளை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பெற இருக்கிறோம்.
வரைவு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ள இணைய வர்த்தக நிறுவனங்களுக்கான வழிமுறைகள், புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இணைக்கப்படும். அதன்பிறகு, அந்த வழிமுறைகளை இணைய வர்த்தக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விவகாரத்தில், நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும் என்றார் ராம் விலாஸ் பாஸ்வான்.
இணைய வர்த்தக நிறுவனங்கள் 14 நாள்களுக்குள் நுகர்வோருக்கான பணத்தைத் திருப்பிச் செலுத்தவும், தங்களது இணையதளத்தில் சரக்கு மற்றும் சேவை வசதிகளை வழங்கும் வணிகர்களின் தகவல்களை வெளியிடவும், நுகர்வோர் தெரிவிக்கும் புகார்களைத் தீர்க்கும் நடைமுறைகளைக் குறிப்பிடவும் தற்போதைய வரைவு வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுகர்வோர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பொருள்களின் விலை சாதகமாக இருப்பதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.