மத்திய தில்லி, விகாஸ் பவனின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள தில்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யு) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீ விபத்து நடந்த போது, அந்த அலுவலகத்தில் 22-25 பேர் பணியில் இருந்ததாக டிசிடபிள்யு அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட இடத்தை தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் பார்வையிட்டார்.